‘கஜா’ புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்களில் ஊழியர்கள் 4 மணிக்கே வீடு திரும்ப உத்தரவு
‘கஜா’ புயல் இன்று கரையைக் கடக்க உள்ளதால் கரை கடக்கும் நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் 4 மணிக்கே வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாகை காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலத்தை ஒட்டி வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் ‘கஜா’ புயல் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ., நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் 11 மணியளவில் நாகை அருகே ‘கஜா’ புயல்  கரையைக் கடக்கும். ‘கஜா’ புயல் தற்போது 22 கி.மீ. வேகத்தில் நாகையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி புயலின் வேகம் அதிகரித்து தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளது. அதேபோல் காற்றின் வேகம் 80-90 கி.மீ. , அவ்வப்போது 100 கி.மீ. வேகத்தில் இருக்கும்.
‘கஜா’ புயல் கரையைக் கடப்பதால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். அதேபோல் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். இந்நிலையில் தேசியப் பேரிடர் மேலாண்மையும் பிற அரசுத்துறைகளும் இணைந்து மேற்கண்ட மாவட்டங்களில் நிவாரண ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.பாண்டிச்சேரியிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதலே மேற்கண்ட 6 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதையடுத்து கனமழையை ஒட்டி மேற்கண்ட 6 மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 4 மணிக்கு வீடு திரும்ப உத்தரவிட வேண்டும் என வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் சத்தியகோபால் மேற்கண்ட 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 3 மணிக்கே வீடு திரும்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும். பெரிய அளவில் மழை இருக்க வாய்ப்பில்லை என்பதால் சென்னைக்கு இந்த எச்சரிக்கை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரியில் 9ம் எண் புயல் எச்சரிக்கை
கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை காரைக்கால் துறை முகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.