கோவை,
அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த மேலும் அவகாசம் வழங்கிஅரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிரமுகர்கள், புரமோட்டர்கள் நகர ஊரமைப்புத்துறை, உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அல்லது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் உரிய அனுமதியின்றி இடங்களை பிரித்து விற்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து ‘‘நிலங்களுக்கு உரிய அனுமதி பெறாத மனைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரமோட்டர்கள் ஆன்லைன் மூலம் சென்னையில் உள்ள நகர ஊரமைப்புத்துறையிடம் முறையாக ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த ஆவணத்தை உள்ளூர் திட்டக்குழுமத்தில் உள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பித்து முறையாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டி அனுமதி பெற வேண்டும். உள்ளூர் திட்டக்குழுமத்திடம் பெற்ற ஆவணங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அல்லது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும்” என தமிழக அரசால் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகத்தினர் நடத்தியகணக்கெடுப்பில் மாநகரில் மட்டும் 948 அனுமதியற்ற லேஅவுட்கள் உள்ளதாகவும், இதில் குறைந்தபட்சம் 35 ஆயிரம் சைட்டுகள் உள்ளதும் தெரியவந்தது. அரசு அறிவிப்பை தொடர்ந்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் மனைகள், லே அவுட்டுகளுக்கு அனுமதி கேட்டு மனைதாரர்கள், புரமோட்டர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அனுமதியற்ற லேஅவுட்கள், சைட்டுகளுக்கு அனுமதியளிக்கும் பணிகள் மாநகராட்சியால் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த காலக்கெடு கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது.இந்த காலகட்டத்தில் மாநகராட்சியில் மனைகளுக்கு அனுமதி பெற 6,800 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2,949 விண்ணப்பங்களுக்கு மாநகராட்சியால் அனுமதிவழங்கப்பட்டது. இவ்வகையில் மாநகராட்சிக்கு வருவாயாக ரூ.82 கோடி கிடைத்துள்ளது. இந்நிலையில் அனுமதி பெறுவதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், நில உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அனுமதியற்ற மனைகளுக்கு அனுமதி பெறுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. அனுமதியற்ற மனைகளை அனுமதி பெற்று வரன்முறைப்படுத்த www.tnlayoutreg.in இணையதளம் வழியாக திங்களன்று (12ம் தேதி) முதல் வரும்16ம் தேதி வரை 5 நாட்களுக்கு அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.