ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசாங்கத்திற்கும் நடைபெறும் மோதல்கள் சில நாட்களாக ஊடகங்களில் முக்கிய செய்தியாக உலா வருகின்றன.ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை மோடி அரசாங்கம் சீர்குலைக்க முயல்கிறது என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. சட்டப்படி ரிசர்வ் வங்கி அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டதுதான்; ரிசர்வ் வங்கிக்கு ஆணையிடும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது என இன்னொரு தரப்பு வாதம் உள்ளது.

ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசாங்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடுகளின் பின்னால் ஒரு அடிப்படை பிரச்சனை உள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கம் செய்வதால்தான் இந்த முரண்பாடுகள் தோன்றியுள்ளன. நவீன தாராளமயக் கொள்கைகளில் மோடி அரசாங்கத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லை. இந்த கொள்கைகளை எவ்வாறு அமலாக்குவது என்பதில்தான் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

குருமூர்த்தி கொளுத்திய வெடி!
இந்த மோதல்களின் உடனடி காரணம் தமிழக ஆடிட்டர் குருமூர்த்திதான் என்பது பத்திரிக்கைகளில் கூறப்படும் செய்தி ஆகும். சில மாதங்களுக்கு முன்பு ஆடிட்டர் குருமூர்த்தியை ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநராக மோடி அரசாங்கம் நியமித்தது. சமீபத்திய இயக்குநர்கள் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள கையிருப்பு தொகையில் சுமார் 3 இலட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசாங்கத்திற்கு மடைமாற்றம் செய்ய வேண்டும் என குருமூர்த்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் உட்பட பலரும் எதிர்த்தனர்.

ரிசர்வ் வங்கியை வழிக்கு கொண்டுவர மோடி அரசங்கம் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7வது பிரிவை கொண்டு மிரட்டுவது என முடிவு எடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளில் ஒருவரான விரால் ஆச்சார்யா நவம்பர் 1ம் தேதி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மோடி அரசாங்கம் 2019 தேர்தலை முன்னிட்டு டி-20 பொருளாதார மாட்ச் விளையாட முயல்வதாகவும் (அதாவது அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது) அது தேசத்தின் பொருளாதாரத்தை நாசமாக்கிவிடும் எனவும் கர்ஜித்தார். இது தனது கருத்து மட்டுமல்ல; ஒட்டு மொத்த ரிசர்வ் வங்கியின் கருத்து எனவும் கூறினார். ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் சர்வதேச நிதி சந்தைக்கு ஏதுவாகவே செயல்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தின் பல்லவிக்கு தாளம் போட முடியாது எனவும் ஆச்சார்யா கூறினார்.

ரிசர்வ் வங்கியின் திடீர் ரோஷம்
தனது அரசியல் நோக்கத்திற்காக ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை சீர்குலைக்க மோடி அரசாங்கம் முயல்கிறது என்பது வெள்ளிடைமலை! எனினும் ரிசர்வ் வங்கிக்கு தனது உரிமை குறித்து திடீரென “ரோஷம்” வந்துள்ளதாக தெரிகிறது. பணமதிப்பு நீக்கம் எனும் மிகப்பெரிய பாதகமான நடவடிக்கையை மோடி அரசாங்கம் அறிவித்த பொழுது இதே ரிசர்வ் வங்கி அடிபணிந்து போனது என்பது தேசம் அறிந்த இரகசியம். அன்று இல்லாத ரோஷம் ரிசர்வ் வங்கிக்கு ஏன் இப்பொழுது வருகிறது எனும் கேள்வியையும் புறந்தள்ள முடியாது.

வங்கித்துறை, ரிசர்வ் வங்கி, அதன் தன்னாட்சி, அரசாங்கத்தின் இறுதி உரிமை இவையெல்லாம் இந்திய முதலாளித்துவத்திற்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடுகள். தனக்கு தேவை எனில் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை தூக்கிபிடிப்பதும் தனது இலாபக்கொள்ளை பாதிக்கும் எனில் அதே தன்னாட்சியை காலில் போட்டு மிதிப்பதும் முதலாளித்துவத்தின் வாடிக்கை. எனினும் இன்று மோடி அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஒரு புறம் தொழில் மந்தம், வளர்ச்சி கடுமையாக பாதிப்பு. மறுபுறத்தில் வேலையில்லா திண்டாட்டம்,விலைவாசி உயர்வு மற்றும் விவசாய வீழ்ச்சி. இதன் விளைவாக மக்களின் அதிருப்தி அதிகரித்த வண்ணம் உள்ளது. 2019 தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் அதிருப்தியை திசை திருப்ப சில அதிரடி பொருளாதார அறிவிப்புகளை செய்தாக வேண்டும். இந்த செலவுகளை ஈடுகட்ட ஒரு வழி ரிசர்வ் வங்கியின் கையிருப்பை பறிப்பது ஆகும்.

ரிசர்வ் வங்கியிடம் மோடி அரசாங்கம் நிர்ப்பந்திப்பது என்ன?
Ø வாராக்கடன் பிரச்சனையில் ரிசர்வ் வங்கி மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும். கடனை வசூல் செய்ய வங்கிகளுக்கு நிர்ப்பந்தம் தரக்கூடாது.

Ø வங்கி கடன் வட்டி விகிதங்களை குறைப்பதன் மூலம் முதலாளிகளுக்கு கடன் குறைந்த வட்டியில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.Ø இதற்காக வங்கிகளின் மறுமுதலீட்டு (Recapitalisation) நிதிக்காக ரூ 3 இலட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை ரிசர்வ் வங்கி அரசாங்கத்திற்கு மடைமாற்றம் செய்ய வேண்டும்.

Ø மறுமுதலீடுகளுக்கு பிறகு வங்கிகள் மூலம் சிறு தொழில்களுக்கான தாராள கடன் திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க ரிசர்வ் வங்கி உதவ வேண்டும்.
இதன் மூலம் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.மூலம் விளைந்துள்ள அதிருப்தியை நீக்க முடியும் என மோடி அரசாங்கம் திட்டமிடுகிறது. மோடி அரசாங்கத்தின் இந்த திட்டத்தை ஏற்க ரிசர்வ் வங்கி தயங்குகிறது. எனவே இது வரை பயன்படுத்தப்படாத ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 7 ஐ சர்வாதிகார முறையில் பிரயோகிக்க மோடி அரசாங்கம் எத்தனிக்கிரது.

ஏன் இந்த நிலை?
மோடி அரசாங்கத்தின் பணமதிப்பு நீக்கம் மூலமாக சுமார் 3 முதல் 4லட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வராது! அது மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமாகிவிடும் என மோடி கனவு கண்டார். அதன் மூலம் மக்களை கவர சில அதிரடி திட்டங்களை அறிவிக்கலாம் என மோடி அரசாங்கம் கனவு கண்டது. ஆனால் அது நடைபெறவில்லை. மாறாக சிறுதொழில்களும், முறைசாரா தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ஜி.எஸ்.டி இன்னொரு மரண அடியை கொடுத்தது.

மோடி அரசாங்கம் தன்னை முட்டுகொடுக்கும் பெரு முதலாளிகளின் கொள்ளை இலாபத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. மறுபுறத்தில் தேர்தல் தேவைக்காக மக்களை கவர்வதற்கு சில அதிரடி நடவடிக்கைகளை அறிவிக்கவும் மோடி அரசாங்கம் எண்ணுகிறது. இந்த திட்டங்களுக்கு பெரிய தொகை தேவை! அதிரடி அறிவிப்புகளுக்கான செலவுகளை வசதி படைத்தவர்களிடம் வரிமூலம் திரட்டலாம்! ஆனால் முதலாளிகளின் நலன்களை காக்கும் மோடி அரசாங்கம் அதனை செய்யாது. இன்னொரு மாற்று வழியாக கடன் வாங்குவதன் மூலம் அல்லது பற்றாக்குறை பட்ஜெட் மூலம் இதனை செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்தால் உலக நிதி நிறுவனங்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என மோடி அரசாங்கம் பயப்படுகிறது. ஏனெனில் நம்மிடம் உள்ள 400 பில்லியன் டாலர் அந்நிய செலவாணியின் பெரும்பகுதி மிக்குறுகிய கால முதலீடாக நிதி சநதைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்த தொகை வெளியே பறந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் கைவைக்க எண்ணுகிறது மோடி அரசாங்கம்!

ரிசர்வ் வங்கி மறுப்பதன் காரணம் என்ன? மோடி அரசாங்கம் கேட்கும் தொகையை கொடுத்தால் ரிசர்வ் வங்கி சொத்து மதிப்பு மற்றும் அதன் அவசரகால கையிருப்பின் விகிதாச்சாரம் 6%க்கும் கீழே போய்விடும் அபாயம் உள்ளது. இதனை அதே உலக நிதிமூலதன சக்திகள் விரும்பாது. இதன் விளைவாக முதலீடுகள் இந்தியாவைவிட்டு வெளியேறிவிடும் என ரிசர்வ் வங்கி எண்ணுகிறது. ஒட்டு மொத்தத்தில் மோடி அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி இரண்டுமே நிதிமூலதன சக்திகளை கண்டுதான் பயப்படுகின்றன. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளிலிருந்து வெளிவருவதுதான் இதற்கான அடிப்படை தீர்வாக அமையும்! இதற்கு அசாத்திய அரசியல் தைரியம் வேண்டும்.அது மோடி அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது. மோடி அரசாங்கத்தை இந்த கோணத்திலிருந்து எதிர்க்க ரிசர்வ் வங்கியும் தயாராக இல்லை.

மக்களின் நலனுக்காகவே ரிசர்வ் வங்கியுடன் மோதுகிறேன் எனும் பிம்பத்தை கட்டியமைக்க மோடி முயற்சி செய்யலாம். ரிசர்வ் வங்கியை தனக்கு அடிபணிய வைக்கவும் அதன் தன்னாட்சியை தகர்க்கவும் மக்கள் நலன் எனும் கேடயத்தை மோடி அரசாங்கம் கையில் எடுத்தால் ஆச்சர்யம் அடைய வேண்டியது இல்லை. ஆனால் மோடி அரசாங்கத்தின் ஆட்சி மக்களை கடுமையாக பாதித்துள்ளது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாய வீழ்ச்சி, முதலாளிகளின் கொள்ளை இலாபம், இதனால் உருவான இமாலய பொருளாதார இடைவெளி, ரஃபேல் உட்பட பல ஊழல்கள் இவையெல்லாம் மக்களிடம் அதிருப்தியை விளைவித்துள்ளன. எனவே மோடி அரசாங்கத்தின் மாய பிம்பங்கள் எடுபடுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!
எனவேதான் மோடி அரசாங்கத்தை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். மறுபுறத்தில் மக்களை பிளவுபடுத்த மதவாதம் எனும் ஆபத்தான ஆயுதத்தை கூர்தீட்டி வருகிறது. இதனையும் மக்கள் அடையாளம் காண்பார்கள் என்பது உறுதி!

Leave a Reply

You must be logged in to post a comment.