பெங்களூரு, நவ. 14-

நவம்பர் 29-30 தேதிகளில் தலைநகர் புதுதில்லியில் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெறும் விவசாயிகளின் பேரணி/ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துத்தரப்பினரும் அணிதிரள முன்வர வேண்டும் என்று விவசாயிகளின் பிரச்சனைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற இதழியலாளர் பி.சாய்நாத் அறைகூவல் விடுத்தார்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமையன்று மாலை “விவசாயிகளுக்காக தேசம்” என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று பி.சாய்நாத் பேசியதாவது:

நாட்டில் இயங்கும் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருக்கிணைப்புக்குழு என ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றன. அதன் சார்பில் வரும் நவம்பர் 29-30 தேதிகளில் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டம் தலைநகர் புதுதில்லியில் நடைபெறவிருக்கிறது. இப்பேரணி/ஆர்ப்பாட்டத்தின் மிக முக்கியமான பிரச்சனைகள் இரண்டுதான். முதலாவதாக, விவசாயிகளுக்கு தாங்கள் விளைவிக்கும் விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடர்பானதாகும். இரண்டாவது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பானதாகும்.

இந்த இரண்டு பிரச்சனைகள் குறித்தும் இரண்டு சட்டமுன்வடிவுகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து, உரிய விவாதங்கள் மேற்கொண்டு, நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்பேரணியின் பிரதானமான கோரிக்கையாகும். இதற்காக நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் 3 வாரங்களுக்கு நடத்தப்பட்டு, இவற்றின்மீது உரிய விவாதங்கள் நடத்தி இச்சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறு தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டிலுள்ள அனைத்துத்தரப்பினரும்  – டாக்டர்கள், வழக்குரைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத்தரப்பினரும் –  ஆதரவுக் குரல் எழுப்பி, தார்மீக ஆதரவினை அளித்திட வேண்டும். இவர்கள் தார்மீக ஆதரவுக் குழுக்களை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மூலமாக செயல்பட வேண்டும்.

விவசாயியின் கோரிக்கைகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் கேட்கக்கூடும். நாட்டில் உணவு உண்ணும் அனைவருக்கும் சம்பந்தம் உண்டு.

கடந்த இருபதாண்டுகளில், 1995இலிருந்து 2015வரை,  3 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  விவசாயிகளின் தற்கொலைகளை எண்ணமுடியவில்லை என்பதற்காக மத்திய அரசாங்கம் அவ்வாறு எண்ணுவதையே இப்போது கைவிட்டுவிட்டது.

இவ்வாறு விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறியிருக்கிறது. எனவே விவசாயிகளைப் பாதுகாத்திட சமூகத்தின் அனைத்துத்தரப்பினரும் ஆதரவுக் கரம் நீட்டிட வேண்டும். சென்றவாரம் கேரள மாநிலம் கோழிக்கோடு சென்றிருந்தேன். அங்கே இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், “நாங்கள் ஆயிரம் பேர் தில்லி பேரணிக்கு கையிலும், தலையில் கோரிக்கை பட்டைகள் அணிந்து வர முடிவு செய்திருக்கிறோம்,” என்றார்கள்.

இவ்வாறு மாணவர்களும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும், வழக்குரைஞர்களும், மருத்துவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக அணிதிரண்டு வர வேண்டும்.

நாம் மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டமுன்வடிவுகளுக்காகவும், நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் மூன்று வாரங்களுக்குக் கூட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இம்மூன்றுவாரங்களும் விவசாயிகளின் பிரச்சனைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, விவாதங்கள் நடத்தி, சட்டமுன்வடிவுகளை சட்டமாக நிறைவேற்றிட வேண்டும்.

இந்த நாட்டில் நள்ளிரவு வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி, குடியரசுத்தலைவரையும் அமர வைத்து, ஜிஎஸ்டி சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிந்திருக்கிறது. யாருடைய நலனுக்காக. கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இதனைச் செய்ய முடிந்திருக்கிறது.

ஆனால் கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவருகின்ற விவசாய நெருக்கடி குறித்து, விவாதம் நடத்தி, சரியான முடிவுகளை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்க முடியவில்லை. கடந்த 20 ஆண்டுகளில்,  1 கோடியே 50 லட்சம் விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டே வெளியேறிவிட்டார்கள். இது 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியாகும்.  இவ்வாறு  விவசாயத்துறை கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது.

இரு ஒருபுறம். மறுபுறத்தில் நாட்டில் விவசாயம் மேற்கொள்வது என்பது தற்போது விவசாயிகளின் கைகளிலிருந்து கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. விதைகள், உரங்கள், ரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் என அனைத்துமே கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மாறிவிட்டது. இதுமட்டுமல்ல, நாட்டின் பல இடங்களில் தண்ணீர் விநியோகம் கூட கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறது.   இவ்வாறு விவசாயிகளின் கைகளிலிருந்த ஒவ்வொரு விஷயமும் அவர்களின் கையைவிட்டு, கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

எனவேதான் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை மேற்கொண்டு, இவ்விரு சட்டமுன்வடிவுகளின்மீதும் விவாதங்கள் நடத்தி, இப்பிரச்சனைகள் அனைத்தையும் பேசி சரிசெய்திட வேண்டும்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் அறிக்கை குறித்து அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களில் எத்தனை பேர் அதனைப் படித்திருப்பீர்கள் என்று தெரியாது. ஆனாலும் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எம்.எஸ். சாமினாதன்  ஆணையத்தின் முதல் அறிக்கை, 2004 அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இறுதி அறிக்கை, 2006 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இதுவரை அவற்றின் மீது விவாதம் நடத்தி, முடிவுகள் மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு நேரமே கிடைத்திடவில்லை. ஜிஎஸ்டி நிறைவேற்றி, கார்ப்பரேட்டுகளின் நலன்களைக் காத்திட நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால் சாமினாதன் ஆணையத்தின் அறிக்கை மீது விவாதம் நடத்தி, விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்த்திட, நேரம் ஒதுக்க முடியவில்லை.

எனவேதான் மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டமுன்வடிவுகளுக்காகவும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை மூன்று வாரங்களுக்கு நடத்தி, நாட்டின் முதுகெலும்பாகவுள்ள விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்த்திட இந்த அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக, நாடாளுமன்றம் நோக்கி பேரணியை நவம்பர் 29-30 தேதிகளில் விவசாயிகள் மேற்கொள்கிறார்கள். அதற்கு முழு ஆதரவினையும் அனைத்துத்தரப்பினரும் தங்களுக்கு சாத்தியமான அனைத்து விதங்களிலும் மேற்கொண்டிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பி.சாய்நாத் பேசினார்.

(ந.நி.)

Attachments area

Leave a Reply

You must be logged in to post a comment.