மதுரை:
திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி இடைதேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தேர்தலுக்கான கால அட்டவணை எதுவும் இருப்பின் அதையும் பதில் மனுவாக தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “ திருவாரூர், திருப்பரன்குன்றம் சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவு, தேர்தல் விதிப்படி சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிக்கபட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் விதிகளில் உள்ளது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமைச் செயலர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பிருப்பதால் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் கூறியிருந்தார். இது ஏற்கக்கூடிய காரணம் இல்லை. மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் போஸ் உயிரிழந்துவிட்டார். இதனாலும் தேர்தலை தள்ளிவைக்க முடியாது.
இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது இரண்டு தொகுதிகளில் இடைதேர்தல் நடத்தினால் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் தமிழக அரசு இடைதேர்தல் நடத்த ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் விதிமுறைபடி சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிக்கபட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்தும் விதமாக திருப்பரன்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதி இடைதேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை புதனன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேர்தலுக்கான கால அட்டவணை எதுவும் இருப்பின் அதனையும் பதில் மனுவாக தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை நவ. 26- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: