ராய்பூர்(சட்டீஸ்கார்), நவ.14-

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களால் கட்டவிழ்த்துவிட்டிருக்கக்கூடிய அபாயங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றிட உறுதி ஏற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்துள்ளார்.

சட்டீஸ்கார் மாநிலத் தலைநகர் ராய்பூரில், “அரசமைப்புச்சட்டம், ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம்” என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சட்டீஸ்காரில் “இந்தியாவிற்காக மக்கள்” என்கிற அமைப்பு இக்கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றும்போதே சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

இன்றையதினம் நம் ஜனநாயகத்திற்கு, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மூலமாக உண்மையில் ஆபத்துக்கள் வந்துள்ளன. எந்த அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்களோ, அதே அரசமைப்புச்சட்டத்தைப் படிப்படியாக அழித்து ஒழித்திட நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925இல் உருவானது. அது உருவான காலத்திலிருந்தே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு, இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்ட இயக்கமாகும். தற்போது மத்தியில் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபின், அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு மதச் சிறுபான்மையினருக்கு எதிராக விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறது. நம் அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக இருக்கக்கூடிய மதச்சார்பற்ற ஜனநாயக மாண்புகளை அழித்திடக்கூடிய விதத்தில் திட்டமிட்டு தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. நம் அரசமைப்புச்சட்டம், ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும் நம்  நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்திட நாட்டுப்பற்று கொண்ட அனைத்துப் பகுதியினரும், இதனை அழித்திட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டத்தினரிடமிருந்து பாதுகாத்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.