சென்னை,
தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)தலைவர்களுடன், வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து காத்திருக்கும் போராட்டத்தை ஊழியர்கள் முடித்துக் கொண்டனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு வங்கி மூலம் தொழில்தன்மைக்கு ஏற்ப (ஷெட்யூல் ஆப் ரேட்) சம்பளம் வழங்கவேண்டும், அதிகாரிகளின் வாய் மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும், ஐடிஐ பயின்ற அனைத்து ஊழியர்களுக்கும் வாரியஆணை எண் 505ன் படியும், பராமரிப்பு ஊழியர்களுக்கு அரசாணை எண்.33ன்படியும் ஊதிய மறு நிர்ணயம் செய்ய வேண்டும், பரிசோதனை கூட ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவழங்க வேண்டும், மதிப்பூதிய ஊழியர்களுக்கு சம்பள நிலுவையைஉடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் வடிகால் ஊழியர்கள் புதனன்று (நவ.14) சென்னை விருந்தினர் மாளிகை அருகே 48 மணி நேரகாத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதனை சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே. மகேந்திரன் தொடங்கிவைத்தார்.இந்நிலையில் வாரிய அதிகாரிகள் சங்கத் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதில், வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரன், நிதி இயக்குநர், பொதுமேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், சங்கத் தலைவர் வீ.குமார், பொதுச் செயலாளர் மோ.பாலகுமார், பொருளாளர் வீ.அழகுமலை, நிர்வாகிகள் ஆர்.ரவி, ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையில், தலைமை பொறியாளருடன் கலந்துபேசி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொழில் தன்மைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற்று ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவை 2.50 கோடிரூபாயை வழங்க நிதி ஒதுக்கப்படும். வாரிய ஆணை 505 அனைத்து ஊழியர்களுக்கும் அமலாக்கப்படும். 13 ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள், கருணை அடிப்படையில் 211 பேருக்கு வேலை வழங்கப்படும், பரிசோதனை கூடத்தில் பணியாற்றி ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க அறிவுறுத்தப்படும் என்று அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். மேலும், இதற்கான நடவடிக்கை குறிப்பில் (மினிட்ஸ்) கையெழுத் திட்டு கொடுத்தனர். இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: