கடலூர்,
கஜா புயல் தீவிரத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான கஜா புயல், தமிழகம் நோக்கி முன்னேறி வருகிறது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் முன்னேறிவந்த புயலின் வேகம், தற்போது 8 கிலோமீட்டராக குறைந்துள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சென்னையிலிருந்து கிழக்குத் திசையில் 580 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கில் 680 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பின்னர் வலு குறைந்து, பாம்பன் மற்றும் கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் வடகடலோரம், புதுச்சேரி, தெற்கு கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை ஒரே நாளில் 20 சென்டிமீட்டருக்கும் மேலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இதைத்தொடர்ந்து மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கான சிறப்பு அதிகாரி  ககன் தீப்சிங் பேடி பார்வையிட்டு வருகிறார். மேலும் மாணவர்களின் நலன் கருதி கடலூர்  மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார்  மற்றும் அரசு பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என  ஆட்சியர் அன்புசெல்வன்  கூறினார். இதேபோல் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் உள்ள பள்ளி,  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.