திருப்பூர்,
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு 21 மாத நிலுவை ஓய்வூதியத்தொகையை வழங்க வேண்டும். மருத்துவப்படி மாதம்ரூ.1,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவையின் முடிவுப்படி செவ்வாயன்று காலை திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்யவும், அங்கன்வாடி, சத்துணவு, கிராம ஊராட்சி செயலர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருப்பூர் வட்டக் கிளைத்தலைவர் ஜி.சண்முகம் தலைமை வகித்தார். இதில் கிளை துணைத்தலைவர் மாயன்குட்டி வரவேற்றார். வட்டக் கிளைச் செயலர் பி.மகுடேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

இதில் சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், பல்வேறு துறைரீதியான ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் டி.துரைசாமி, பி.சௌந்தரபாண்டியன், பி.பாலகிருஷ்ணன், கருப்பசாமி, அச்சுதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். இதில் ஓய்வூதியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டக் கிளைப் பொருளாளர் எஸ்.சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

தாராபுரம்

இதேபோல், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புவட்டக்கிளை தலைவர் பீர்ஜாபர்தலைமையில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. வட்டக்கிளை செயலாளர் சேக் முகம்மது, மாவட்ட துணை தலைவர் மணிவேல், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், மத்திய அரசு ஊழியர் சங்க நிர்வாகி பாரதி, அரசு ஊழியர் சங்கவட்டக்கிளை தலைவர் பி.ராஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.