===வி.குமார்===                                                                                                         தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பல ஆண்டுகாலம் பணியாற்றி ஒய்வு பெற்று, மரணமுற்ற தொழிலாளர்கள் குடும்பங்கள் பசி-பட்டினியில் பரிதவித்துசெய்வதறியாமல் விழிபிதுங்கி உள்ளனர், இவர்களுக்கான ஓய்வூதியத்தை தர மறுத்து இவர்களை மரண குழியில் தள்ளியுள்ளது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்.

இத்தொழிலாளர்களின் பிரச்சனைகளோடு, பணியாற்றும் ஏனைய தொழிலாளர்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து மக்களுக்கு கிடைத்திட, குடிநீரை வியாபார பொருளாக மாற்றதே என வலியுறுத்தியும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)2018 நவம்பர் 14 முதல் காத்திருப்பு போராட்டத்தை சென்னை வாரிய தலைமையகம் முன்பு நடத்துகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாரிய தொழிலாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல்…
தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் 1970ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் போது துவக்கப்பட்டது. அதற்கு முன்பாக பொது சுகாதார துறையோடு செயல்பட்டுவந்தது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு முறையாக கிடைத்திடும் நோக்கோடுதான் வாரியம் தனியாக உருவாக்கப்பட்டது.

வாரியம் துவங்கிய காலத்தில் 1000லிட்டர் குடிநீர் நகராட்சிகளுக்கு ரூ.4.50 விலையிலும், கிராமப்புறங்களுக்கு ரூ.3.50 விலையிலும் கொடுக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு 2017 டிசம்பர் மாதத்தில் இருந்து 1000லிட்டர் குடிநீர் கிராமப் புறங்களுக்கு ரூ.7.35விலையிலும், பெருநகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகளுக்கு ரூ.9.45விலையிலும், மருத்துவமனை, சுகாதார மையங்கள் போன்றவற்றிற்கு ரூ.30விலையிலும், தீயணைப்பு துறை, சிப்காட், அவுசிங்போர்டு போன்றவற்றிற்கு ரூ.80விலையிலும், இதர அரசு துறை நிறுவனங்களுக்கு ரூபாய் 125 விலையிலும், தனியார் தொழிற்சாலைகளுக்கு ரூ.150விலையிலும் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த சீரியபணியில் வாரிய ஊழியர்கள் இரவு பகல் பாராமல் செயல்பட்டு வருகிறார்கள் இதனால் மத்திய அரசின் பாராட்டு உட்பட பல்வேறு விருதுகள் வாரியத்துக்கு கிடைத்துள்ளன. 1970ம் ஆண்டுக்கு பிறகு பயனீட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே வந்தாலும், ஊழியர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

2001ல் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களிலேயே நிதி நெருக்கடி என்று கூறி செலவை குறைக்க வேண்டும் என்ற காரணத்தை காட்டி சென்டேஜ் குறைப்பு, நமக்கு நாமே திட்டம், சுசில்தாரா திட்டம் போன்றவைகளை வாரியம் அமுல்படுத்தியது, அதோடு சுவாமிநாதன் குழு பரிந்துரை என்ற பெயரில் 30சதம் ஆட்குறைப்பு செய்ய வாரிய நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாரியத்தில் தற்போது 467 கூட்டு குடிநீர்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் 84பெரிய திட்டங்களாகும். இருப்பினும் வாரிய ஊழியர்கள் ஒருவர்கூட பணியில் இல்லாமல் செயல்படும் பெரிய அளவிலான திட்டங்களும் உண்டு. புதிய குடிநீர்திட்ட பராமரிப்பு பணிக்கு பணியாளர்களை நியமிக்காமல் காண்ராக்ட் விடுவதும், போதுமான நிதி ஒதுக்காத நிலையும் உள்ளது.

இதோடு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தன்னுடைய கொள்கைகளை வாரியம் வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த காலத்தில் திருப்பூரில் தனியாரிடம் திட்டம் முழுமையாக 99 வருடத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதன் விளைவு நகராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் வழங்கப்படும் குடிநீரின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், அனுமதித்தால் வாரிய பராமரிப்பு பணிகள் சிறுக சிறுக தனியாருக்கு சென்று வாரியமே இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அரசின் அனுமதியோடு இப்பணி வேகமாக அமுலாக்க வாரியம் முயற்சித்து வருகிறது. இதன் விளைவு வருங்காலங்களில் காசு இருப்பவனுக்கே குடிநீர் என்ற நிலை உருவாகிவிடும் ஆபத்துஉள்ளது.வாரியத்தின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது. குடிநீர் திட்டங்கள் ஊழியர் பற்றக்குறையால் முறையான பராமரிப்பு இன்றி பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

பரிசோதனைக் கூட ஊழியர்களின்                                                                                                                                  மத்தியில் ஐக்கிய முன்னனி ஆட்சியின் போது குடிநீரை பரிபரிதாப நிலைசோதிப்பதற்காக பரிசோதனை கூடங்கள் தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டது. இதன் பணி குடிநீரில் கெமிக்கல், கிருமிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை பரிசோதித்து மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பரிசோதனை கூடங்கள் உருவாக்கப்பட்டன.இதற்கான நிதியை பொறுத்தவரை 60சதம் மத்திய அரசும், 40 சதம் மாநில அரசும் அளிப்பது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் வாரியம் 500 தொழிலாளர்களை கெமிஸ்ட்டு, அட்டன்டர், டாட்டா என்ரீ அப்ரேட்டர், பணிக்கு அமர்த்தியது.

இத்தொழிலாளர்களுக்கு ரூ.6000 முதல் 10,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட்டது. இத்தொழிலாளர்களை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து வெளியேற்றியுள்ளது.

தூய்மை இந்தியா குறித்து வாய்சவடால் அடிக்கும் மோடி. மத்திய அரசு வழங்கிவந்த 60 சதமான மான்யத்தை நிறுத்தியதன் விளைவாக மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பரிசோதிக்கப்படாமலேயே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான தொற்று நோய்களுக்கு மக்கள் ஆளாக நேரிடுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது, வழங்கப்பட்டு வந்த நிதி வெட்டப்படுகிறது இதுகுறித்து எந்தவித எதிர்ப்போ அல்லது மத்திய அரசை நிர்பந்தபடுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மோடிக்கு வெண்சாமரம் வீசுவது, அனைத்து துறைகளிலும் பணம் சம்பாதிப்பது போன்ற செயலை மட்டும் செய்துகொண்டு இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமியின் தமிழக அரசு வாய்மூடி மௌனியாக காட்சியளிக்கிறது.

வாரியத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருந்தும் உரியமுறையில் பணிகள் நிரப்பப்படாததால் வாரிய அலுவலகங்கள் வெறிச்சோடி கிடைக்கிறது. அலுவலகத்திற்கு காவலர்கள் கூட இல்லாத நிலை, ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊதியம், ஓய்வூதியம், ஓய்வூக்கால பலன்கள் வழங்காத அவலம் அதிகரித்து வருகிறது. இதுமட்டும்மல்லாமல் திட்டங்களை தனியாரிடம் கொடுப்பதன் மூலம் , ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஈடுபடுத்துவதின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. தற்போது வாரியத்தில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். வாரியம் 4ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருப்பதாக கணக்குகாட்டி 3ஆயிரம் தொழிலாளர்களுக்கான ஊதியம் ஏப்பம் விடப்படுகிறது. குடிநீர் வழங்கும் வாரியம் இன்று கொள்ளை கூடாரமாக காட்சியளிக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல்….
1997ம் ஆண்டு வாரிய நிர்வாகம் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களை பராமரிக்க பொருத்துனர், மின்பணியாளர், பராமரிப்பு உதவியாளர் ஆகிய பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்யாமல் தொகுப்பூதிய அடிப்படையில் அதாவது மாத ஊதியமாக ரூ.1000, ரூ.1500, ரூ.2000 என்ற வகையில் 1011பேரை பணிக்கு அமர்த்தியது.
இத்தொழிலாளர்கள் 12மணி நேரம் வரை வேலை பார்ப்பதால் இத்தொழிலாளர்கள் அனைவரையும் பணியில் சேர்ந்த தேதி முதல் நிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியான பல்வேறு கட்ட போராட்டங்களை களத்தில், ரோட்டில், அலுவலகத்தில் நடத்தியது மட்டுமல்லாமல் தொழில் தாவா எழுப்பி வழக்கும் நடத்தியது. இதன் விளைவாக 2003ம் ஆண்டு தொழிற்தீர்ப்பாயம் இவ்வூழியர்களை நிரந்தரம் செய்ய தீர்ப்பு வழங்கியது.

வாரியம் தீர்ப்பை அமுல்படுத்தாமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 2006ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. திரு.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரை நேரில் சந்தித்து முறையிட்டதின் பேரில் உடன் பணிநிரந்தர ஆணைபெற்றோம் அப்போதுகூட அவரிடத்தில் வழக்கின் தீர்ப்பை இருதரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் 15.10.2012ல் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில் “2 காலண்டர் ஆண்டுகளில் 480 நாட்கள் பணிமுடித்த தேதியில் இருந்து பணிநிரந்தரம் வழங்கி காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டுமெவும், காலமுறை ஊதிய பணபயன்களை 01.08.2006முதல் வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது” உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாரியத்திற்கு சங்கம் எழுதிய கடிதத்தின் விளைவாக அன்றைக்கு வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்த திரு.ஏகாம்பரம் ஐ.ஏ.எஸ்., அவர்கள் நீதிமன்ற தீர்ப்பின் படி வாரிய உத்தரவை பிறப்பித்தார். பிறப்பித்த உத்தரவில் 480 நாட்கள் பணிமுடித்த தேதியில் இருந்து நிரந்தரம், விடுப்பு சலுகைகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றை உறுதிபடுத்தினார். அவருக்கு பின்வந்த மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்றவர்கள் இவ்வுத்தரவினை அமுல்படுத்தாமல் தொடர்ச்சியாக மேல் முறையீடு செய்ய, சங்கம் அதை தகர்க்க, தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வாரிய பணத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் பொருத்துனர், மின்பணியாளர்களுக்கு ஊதியம் மாற்றம் செய்து வெளியிடப்பட்ட வாரிய ஆணை எண்: 505ஐ அமுலாக்க மறுத்துவருகிறது. இதுகுறித்தும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை, தீர்ப்பை மதிக்க வாரியமும், தமிழக அரசும் தயாராகயில்லை.
கடந்த 13.12.2017ல் சங்கத்தோடு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் கூட ஒருவருடம் கடந்தும் நிறைவேற்றாத நிலை நீடிக்கிறது அந்த பேச்சுவார்த்தையில் வாரியத்தில் பணியாற்றக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வங்கி மூலம் வழங்கப்படும் என ஏற்றுக்கொண்டனர் அதோடு கீழ்நிலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசாணை எண்; 338ன் படி ஊதிய மறு நிர்ணயம் செய்யப்படும், வாய்மொழியாக நிறுத்தியுள்ள ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என மினிட்ஸ் போடப்பட்டு சங்க நிர்வாகிகளும், வாரிய அதிகாரிகளும் கையொப்பமிட்டனர். இருப்பினும் ஒருவருடம் கடந்தும் ஏற்று கொண்ட எதையும் அமுலாக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.

மேற்கண்ட அவலங்கள் நீங்க, உரிமைகளை பெற்றிட, ஓய்வூதியர்களை பாதுகாத்திட, ஒப்பந்ததொழிலாளர்கள் நலன்காத்திட அரசாங்கத்தை, வாரியத்தை நிர்பந்தித்திட வாரிய தலைமையகம் முன்பு ஒன்றுகூடுவோம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்போம்! வெற்றி பெறுவோம்!!

Leave a Reply

You must be logged in to post a comment.