சேலம்,
குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தவறான தொடுதல் எது?, அவ்வாறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும்?, அதனை யாரிடம் தெரியப்படுத்த வேண்டும் என குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் ஆசியர்கள் கற்றுதர வேண்டும் என சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் வேண்டுகோள் விடுத்தார்.

குற்றங்களிலிருந்து குழந்தைகளையும், நம்மையும் பாதுகாத்து கொள்வது எப்படி?, அவர்களின் எதிர்காலம் என்ன?, ஏன் இதுபோன்ற குற்றங்கள் நடக்கின்றது? என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் அப்சரா ரெட்டி இயக்கிய “அன்மேக்கிங் ஆப் எ மான்ஸ்டர்” ஆவணப்படம் செவ்வாயன்று சேலத்தில் வெளியிடப்பட்டது. இதில் சென்னை புழல் சிறையானது 212 ஏக்கரில், இந்தியாவின் மிக மோசமாக கருதப்படும் பல்வேறு சிறை கைதிகளை உள்ளடக்கியது. இங்கு பாலியல் பலாத்காரம், கொலைக் குற்றம், போதை மருந்து, விபச்சாரம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை புரிந்தவர்கள் என ஏராளமானோர் உள்ளனர். சென்னை புழல் சிறையில் நீண்ட நாட்களாக உள்ள குற்றவாளிகள் பற்றியும், அவர்கள் குற்றம் புரிந்த சூழ்நிலை மற்றும் அவர்களின் தற்போதைய மனநிலையையும் அலசுகிறது இந்த ஆவணப்படம். குறிப்பாக ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ள பேரறிவாளன், சிறுமி ஷாலினி மற்றும் தன் தாயையே கொலை செய்த தஷ்வந்த் ஆகியோரது பேட்டிகள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர் சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் பேசுகையில், இந்த ஆவணப்படம் மூலம் குற்றம் புரிந்தவர்களின் தற்போதைய மனநிலையை தெளிவாக நாம் காண முடிந்தது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். அதேநேரம் குற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். குற்றங்களிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பதை வலியுறுத்தி சேலம் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே கொண்டு சேர்க்க இங்குள்ள ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளிடமும், மாணவியரிடத்தும் தவறான தொடுதல் எது?, அவ்வாறு நிகழ்ந்தால் என்ன செய்யவேண்டும்?, அதனை யாரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை விளக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் சியாமளாதேவி, காவல்துறை சட்ட ஆலோசகர் ரஷிதா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் நிர்மலா தேவி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: