புதுச்சேரி,
கஜா புயலை எதிர்கொள்ள அரசு இயந்திரங்கள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கஜா புயல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் உடனிருந்தார். அப்போது புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் புயல் பாதுகாப்பு மையம் ஏற்படுத்துவது என்றும் இந்த மையத்திற்கு வரும் புகார்களை பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை சமூக நல கூடங்கள், பள்ளிகளில் தங்கி வைக்கவும் ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்களை தீயணைப்பு, காவல்துறை மூலம் உடனடியாக முகாம் களுக்கு கொண்டுவரவும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை பொதுப்பணித்துறையும், உள்ளாட்சித் துறையும் உடனடியாக வெளியேற்றவும் முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு குடிமைப் பொருள் வழங்கல் துறை உணவு பொட்டலங்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கஜா புயலை முன்னிட்டு கால்வாய்களை தூர்வாரி உள்ளோம். கழிவுநீர் வாய்க்கால் களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீர் தேக்கங்களில் நீரை தேக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொற்று நோய் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேரிடர் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நிலைமையை சமாளிக்க புதுச்சேரி அரசு நிர்வாக இயந்திரமே தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.