சென்னை,
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ் வழியில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் 80 லட்சம் பேர், ஆங்கிலப் பேச்சு பயிற்சி திறன் இல்லாததால், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவதாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு வழக்குத் தொடர்ந்தார். அரசு தமிழ் வழிப் பள்ளிகளில், ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரியும் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. போட்டித் தேர்வுகளில் ஆந்திரா மற்றும் கேரளா மாநில மாணவர்களே முன்னிலை வகிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், மனுதாரர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. என்பதற்காக, இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அப்போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழ் வழி அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை துவங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக வாதிட்டார். ஆங்கிலப் பேச்சு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்த கூடாது? என்று கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக, டிசம்பர் 6ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: