===பேராசிரியர்,பிரபாத் பட்நாயக்===
(நாடு விடுதலை அடைந்த நிலையில் தற்சார்புப் பொருளாதாரம், பொதுத்துறை, உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட இறக்குமதி மாற்றுக் கொள்கை, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் நலன்களின் பாதுகாப்பு என ஒரு இந்தியப் பொருளாதாரப் பாதை வகுக்கப்பட்டது. ஆனால், 1990களில் விரைவான வளர்ச்சி என்ற அடிப்படையில் நவீன தாராளவாதக் கொள்கைகளின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டோம். இன்று உலக முதலாளித்துவ நெருக்கடியின் பின்னணியில், அந்த நவீன தாராளவாதமே முட்டுச் சந்தில் வந்து நிற்கிற போது, புதிய திசை வழி குறித்து பேராசிரியர் பிரபாத் பட்நாயக், “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” (28.10.2018) ஏட்டில் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையின் சுருக்கம் இங்கே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது)

மூன்றாம் உலகம் என இன்று நாம் அழைக்கும் உலகம் இதே வடிவத்தில் தான் எப்போதுமே இருந்தது எனக் கூற முடியாது. உலக மூலதனத்தின் (Metropolitan Capital) ஊடுருவல் காரணமாக, அதன் கட்டமைப்பு ஒரு குறிப்பிட்ட மாற்றத்தினை அடைந்தது. அதனால் தான், ஏ.ஜி.பிராங்க் என்ற பொருளாதார அறிஞர் அதை “குன்றிய வளர்ச்சியின் வளர்ச்சி” (Development of Underdevelopment) என்று குறிப்பிட்டார். இறக்குமதிகளின் மூலம் உள்நாட்டு கைவினைத் தொழில்களை சிதைக்கும் போக்குகள் (De-industrilaiisation), காலனியாதிக்க வரி முறைகளின் மூலம் நாட்டின் பொருளாதார உபரியின் கணிசமான பகுதியை மடைமாற்றம் செய்தது (Drain of Surplus) ஆகியவை, மக்களை பெருமளவில் நிலத்தை நம்பி வாழ்பவர்களாக மாற்றி அவர்களை வறுமைக்குள் தள்ளியது.

இடது சாரிகளின் வாதம்…
உலக முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் இணைந்ததன் விளைவாகத்தான் வளர்ச்சி குன்றியது என்ற உணர்வு, சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் மேலோங்கி இருந்தது. எனவே, ஒரு மாற்றுப் பொருளாதாரப் பாதையின் மூலம் தான் முன்னேறிச் செல்ல முடியும் என்ற எண்ணமும் மேலோங்கியது. எனினும், உலக முதலாளித்துவம் இதனை அனுமதிக்காது என்பது இந்திய முதலாளிகளுக்கு தெரியும். மேலும் இந்திய முதலாளிகள் உலக முதலாளித்துவ அரங்கில் தாமதமாக நுழைவதால், அவர்களுக்கு தங்களது சொந்த நிலைமை குறித்த இயல்பான அச்சமும் இருந்தது.

இதன் விளைவாகத்தான் அவர்கள் உள்நாட்டில், நிலப்பிரபுக்களுடன் நெருங்கி நின்றனர். அவர்களால், உலக மூலதனத்தை எதிர் கொள்ள முடியவில்லை. தொழிலாளி – விவசாயி கூட்டணியின் அடிப்படையிலான ஒரு அரசு தான் அதனை எதிர் கொள்ள முடியும் என்ற இடதுசாரிகளின் கருத்துக்கு அன்று அறிவுத்தளத்தில் கணிசமான செல்வாக்கு இருந்தது. இவ்வகையில், மூன்றாம் உலக நாடுகள் காலப் போக்கில் சோஷலிசத்தை நோக்கி நகர முடியும் என்ற ஒரு கணிப்பும் இருந்தது.

நவீன தாராளவாதம் ….
உலகப் பொருளாதாரத்திலிருந்து தனித்துச் செயல்படுவதற்கு ஆதரவாகச் சொல்லப்பட்ட காரணிகள், பின்னர் நவீன தாராளவாத காலத்தில், வலுவிழக்கத் தொடங்கின. அப்போது வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற இரு வகையான நாடுகள் உருவாகி இருந்தன. வளரும் நாடுகளின் தொழிலாளர்கள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் மூலதனம் வளரும் நாடுகளுக்குள் செல்ல முடியவில்லை. சட்டப்படி மூலதனம் ஒரு வளர்ச்சியடைந்த நாட்டை விட்டு வளரும் நாட்டுக்கு செல்ல முடியும் என்றாலும், பல காரணங்களால் அதனை மூலதனம் விரும்பவில்லை. வளரும் நாடுகளின் சந்தையினைப் பிடிப்பதிலும், அவற்றின் கச்சாப் பொருட்களை கபளீகரம் செய்வதிலும் மட்டுமே உலக மூலதனம் ஆர்வம் காட்டியது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், வளர்முக நாடுகளில் கூலி மிகவும் குறைவாக இருந்த நிலையிலும் கூட, மேலை நாட்டு மூலதனம், தங்களது நாடுகள் உள்ளிட்ட உலகச் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வளரும் நாடுகளில் நேரடியான தொழில் உற்பத்திக்கு முன்வரவில்லை.

மாறிய சூழல்..
நவீன தாராளவாத உலகமயச் சூழலில் இந்த நிலைமை மாறியது. உலக அளவிலான கிராக்கியை எதிர்கொள்ளும் வகையில், மூன்றாவது உலகில் நிலவும் குறைந்த கூலி நிலைமையினைப் பயன்படுத்தி, தொழில் உற்பத்தி தொடங்குவதற்கு உலக மூலதனம் இப்போது தயாராக இருந்தது. எந்திரத் தொழில் உற்பத்தி மற்றும் சேவைகளை மூன்றாவது உலகிற்கு மடைமாற்றம் செய்வதன் மூலம், மூன்றாவது உலக நாடுகள், குறிப்பாக, கிழக்கு நாடுகள், கிழக்கு ஆசிய, தெற்கு ஆசிய நாடுகள் விரைவான வளர்ச்சியினை எட்ட முடியும் எனவும், உலக முதலாளித்துவச் சட்டகத்திற்கு உள்ளேயே இது சாத்தியம் எனவும் கருதப்பட்டது.

ஆனால், இது தவறான கருத்தேயாகும். ஏனெனில், மேலை நாட்டு மூலதனமும், மூன்றாவது உலகமும் நெருக்கமாகச் செயல்பட்ட நிலையில், சிறு உற்பத்தி மீதான தாக்குதலும், புராதான மூலதனத் திரட்டல் முறையும் அதிகரித்தது. மாறாக, மூன்றாவது உலகில் வேலைகள் அதிகரிக்கவில்லை. வரலாறு காணாத ஜி.டி.பி வளர்ச்சி ஏற்பட்டாலும், அந்த உயர் வளர்ச்சியின் பின்னணியில் திரளான மக்களின் வறுமை கூடியதே தவிர, குறையவில்லை.
இப்போது உலக முதலாளித்துவம் ஒரு புதிய கட்டத்தினை அடைந்திருக்கிறது. மூன்றாவது உலகுடனான நெருக்கம் குறையத் தொடங்கியிருக்கிறது. உலக முதலாளித்துவச் சட்டகத்திற்கு உள்ளேயே, அதாவது, வர்த்தகம் மற்றும் முலதனக் கட்டுப்பாடுகள் மூலம் உலக முதலாளித்துவத்துடன் கொண்டிருக்கும் உறவுகளிலிருந்து வெளியேறாமலேயே, மூன்றாம் உலக வளர்ச்சி சாத்தியம் என்ற வாதம் வலுவிழந்து வருகிறது. தனது பொருளாதார தற்காப்பு நிலையின் மூலம் (Protectionism) டிரம்ப் இப்போது மூன்றாம் உலகுடனான நெருக்கத்தினை சிதைத்து வருகிறார். நவீன தாராளவாதம் ஒரு முட்டுச் சந்துக்கு வருகிறது என்பதற்கான அறிகுறியே இது.

டிரம்ப் உத்திகள்!
நவீன தாராளவாதத்தினை ஒரு புறம் சிதைத்து வரும் டிரம்ப், அதே வேளையில், உலகமயத்தின் அதன் மைய அம்சமான நிதி மூலதனப் போக்குவரத்தினை, தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். அமெரிக்க மூலதனம், வளர்ச்சி அடைந்த பிற நாடுகளின் மூலதனம் மற்றும் மூன்றாவது உலக நாடுகளின் மூலதனம் என நிதி மூலதனம் அனைத்தையும், அமெரிக்காவின் நுகர்வுத் தேவைக்காக மூன்றாவது உலகில் தொழில் உற்பத்தியில் ஈடுபடுவதிலிருந்து தடுத்து வருகிறார்.

அதே வேளையில், அமெரிக்க மூலதனத்திற்கு தனது நாட்டில் டிரம்ப் பெருமளவில் உதவி வருகிறார். வரி விகிதங்களை வெகுவாய்க் குறைத்து, அமெரிக்க கார்ப்பரேட் லாபத்தினை கணிசமாக உயர்த்தியுள்ளார். அமெரிக்க முதலாளிகளுக்கு ஊறு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளும் டிரம்ப், உலக முதலாளித்துவ அமைப்பிற்குள் மூன்றாவது உலகின் வளர்ச்சியினை தடுத்து வருகிறார்.

கூலி – உற்பத்தித்திறன் – உபரி
டிரம்பின் இந்த நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இன்றைய நவீன தாராளவாத உலகமயச் சூழலில், உலக முதலாளித்துவத்தினைக் கவ்விப் பிடித்திருக்கும் நெருக்கடியினைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உற்பத்தி நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து மூன்றாம் உலகிற்கு மாறிய நிலையில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் உண்மை ஊதியங்கள் உயராமல் குறைந்த நிலையிலேயே நீடிக்கின்றன. அதே வேளையில், மூன்றாம் உலகில் ஊதியங்கள் உயர்ந்து விடவில்லை. காலனியாதிக்க காலங்களில் உருவான வேலையில்லாப் பட்டாளம் மேலும் எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது. கூலி விகிதங்கள் இவ்வாறு உலகம் முழுவதும் குறைந்திருக்கும் வேளையில், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் பெருமளவு கூடியுள்ளது. இயல்பாக உலக பொருளுற்பத்தியில், இது உபரி மதிப்பினை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதாவது முதலாளிகளின் லாபம் ஏகமாய் குவிந்துள்ளது.

அதீத உற்பத்தி – வேலையின்மை!
கூலி அதிகமாய் இருப்பின், பொருளாதாரத்தில் நுகர்வும் அதிகமாய் இருக்கும். ஆனால், உபரி உருவாக்கும் நுகர்வு அதை விட குறைவாக இருக்கும் நிலையில், அது அதீத உற்பத்திக்கு (Over-production) இழுத்துச் செல்கிறது. அமெரிக்காவில், சென்ற நூற்றாண்டின் இறுதியில் உருவான டாட்.காம் குமிழியும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான வீட்டுக் கடன் குமிழியும் நுகர்வு அளவினை உயர்த்தியதால் நிலைமையினைச் சற்று சமாளிக்க முடிந்தது. அதற்குப் பின்னர் குமிழிகள் எதுவும் உருவாகாத நிலையில், அமெரிக்கப் பொருளாதாரமும், உலக முதலாளித்துவப் பொருளாதாரமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின. இதையடுத்து மக்களின் அதிருப்தியும், சமூக நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலும் தோன்றியுள்ளன. நீண்ட காலம் ஊதியங்கள் தேக்கம் அடைந்திருக்கும் பின்னணியில், வேலையின்மையும் உயர்ந்திருப்பது, கூடுதல் சுமையினை உருவாக்கியுள்ளது.
அடுத்தவன் தலையில் கை வைத்து…

இந்த நெருக்கடியினைச் சமாளிப்பதற்கு டிரம்ப் கையில் எடுத்திருக்கும் ஆயுதம், “அண்டை வீட்டுக்காரனை ஓட்டாண்டி ஆக்கும் கொள்கை” (Beggar My Neigjhbour Policy) என்று பொருளாதார அறிஞர்கள் கூறுவார்களே, அது தான். தனது நாட்டில் வேலைகளை உருவாக்க வேண்டும் எனில், பிற நாடுகளில், குறிப்பாக மூன்றாவது உலகின் வேலைகளைப் பறிப்பதன் மூலமே அது சாத்தியம் என அவர் நினைத்து செயல்படுகிறார்.

உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தினை அவர்களால் உடைக்க முடியவில்லை. தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்திற்கு உள்ளேயே, பிறர் தலையில் கை வைத்து அமெரிக்காவினை பாதுகாத்துக் கொள்வதே டிரம்பின் முயற்சி. இதில், பிற நாடுகள் எதிர்வினை ஆற்றாத வரையில், அமெரிக்கா சற்று தாக்குப் பிடிக்கும். மாறாக, எதிர் வினை தொடங்கி விட்டால், நெருக்கடி முற்றி விடும். நவீன தாராளவாத முதலாளித்துவம் முட்டுச் சந்துக்கு வருவதை உணர்த்தும் மற்றொரு அம்சம் இது.

என்ன செய்வது?
உலக முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளேயே தொடர்ந்து பயனடைய முடியும் என்ற மூன்றாம் உலகின் நம்பிக்கை தகரத் தொடங்கி விட்டது. வளர்ச்சி அடைய முடியாதது மட்டும் அல்ல, தேக்கமும், வறுமையும் வேலையின்மையும் அதிகரித்து வருவதானால் உருவான நிலைமையே இது.

மூன்றாவது உலக நாடுகள் இனி தங்களது உள்நாட்டுச் சந்தையை மட்டுமே நம்பி தங்களது நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய வேண்டும். உலகப் பொருளாதாரத்தின் தேக்கம், அமெரிக்காவின் பொருளாதாரத் தற்காப்பு நிலை என்ற பின்னணியில், ஏற்றுமதிச் சந்தையை முதன்மைப்படுத்தி இயங்க முடியாது.

இந்த நோக்கில் வேறு சில அம்சங்களையும் உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளின் விவசாயம் (Peasant Agriculture), உள்நாட்டில் கூடுதலான வருமான சமநிலை, குறைந்த பட்சக் கூலி உயர்வு, அரசின் பொதுச் செலவுகளில் உயர்வு என அவை அமைய வேண்டும். ஆனால், இவற்றை உலக நிதி மூலதனம் விரும்பாது. அது நாட்டை விட்டு வெளியேறும். அதனால் நிதி நெருக்கடி உருவாகும். அந்நிலையில் மூலதனப் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்துதல் அவசியம். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஆகிய நெருக்கடிகள் உருவாகும் நிலையில், இறக்குமதிக் கட்டுப்பாடுகளும் அவசியத் தேவை.

மாற்று அரசு!
இத்தகைய மாற்றங்களை அமலாக்கும் வகையில் தொழிலாளி – விவசாயி வர்க்க அணிசேர்க்கை அடிப்படையில் தன்மை மாற்றம் கொண்ட ஒரு அரசு தான் இந்தப் புதிய சூழ்நிலையினைச் சமாளிக்க முடியும்.

அத்தகைய வர்க்க அணிசேர்க்கை உருவாக்கும் இயக்கம் தான் ஒவ்வொரு கட்டமாக நாட்டை சோஷலிசத்தை நோக்கி நகர்த்திச் செல்லும். மூன்றாவது உலகத்தின் வளர்ச்சி சோஷலிசத்தை நோக்கிய பாதையின் மூலமே சாத்தியம் என்ற பழைய வாதத்தின் மெய்த்தன்மை, இன்றைய இந்தப் புதிய சூழலில் மீண்டும் அரங்கேறுகிறது.

(தொகுப்பு : இ.எம். ஜோசப்)

Leave a Reply

You must be logged in to post a comment.