தேனி:
போடி அருகே 500 ஏக்கர் பரப்பில் உணவு பூங்கா அமைப்பதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேனியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் உணவு பூங்கா அமைப்பதற்கு 500 ஏக்கர்
நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்திப் பொருள் பதப்படுத்தும் தொழில், மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்புத்தொழில் தொழில் தொடங்கவும், உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். பெரியகுளம் பகுதியில் மாங்கூழ் தயாரிப்பு தொழில்
தொடங்குவதற்கு அரசு சார்பில் தனியாருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று மத்திய நீர்வள குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், அணையில் முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கவும், சிற்றணையை பலப்படுத்தி அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும் கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி, அதிமுக ஆட்சியில் பெரியாறு அணையில் 142 அடி வரைதண்ணீர் தேக்கி, தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டது.பெரியாறு அணை அருகே சிற்றணையை பலப்படுத்துவதற்கு தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பணிகளுக்கான

கட்டுமானப் பொருள்கள் கேரளத்தில் உள்ள வலக்கடவு வழியாக பெரியாறு அணை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், சிற்றணையை பலப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிக்காக அப்பகுதியில் உள்ள சில மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு 4 ராட்சதக் குழாய்கள் மற்றும் இரைச்சலாறு மூலம் மொத்தம் 2,300 கன அடி வரை மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல முடியும். மழைக் காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் தேங்கும் உபரிநீரை தமிழப் பகுதிக்கு முழுமையாக கொண்டு சென்று, தென் மாவட்டங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு புதிதாக கால்வாய் மற்றும் 20 குழாய்கள் அமைத்துக்கொள்ளவும் மத்திய மற்றும்
கேரள அரசுகளிடம் அனுமதிக் கோரப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், வருசநாடு, கம்பம், போடி மலைப் பகுதியில் நிலப்பட்டா வைத்திருப்பவர்கள் அந்த நிலங்களில் விவசாயம் செய்து வருவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. வன நிலங்களை பாதுகாக்கும் கடமை வனத்துறைக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.