திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் அமெரிக்க படைப் புழுத் தாக்குதலால் மக்காச்சோள விவசாயிகள் நிலைகுலைந்தனர். 35 ஆயிரம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்கள் நாசமாகி வருகிறது. அது பற்றிய சிறப்புத் தொகுப்பு வருமாறு:

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதான பயிர் மக்காச்சோளம். திண்டுக்கல், பழனி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, பச்சலநாயக்கன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. பல இடங்களில் மானாவாரியாகவும், தோட்டப்பயிராகவும் பயிரிடப்படுகின்றன.

‘ஆர்மி வார்ம்’
கிட்டத்தட்ட 35 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் தற்போது அமெரிக்கப் படைப்புழுக்கள் தாக்கியுள்ளன. ஆங்கிலத்தில் ‘புருடாபெர்சியா’ என்றும் இந்த புழுக்கள் அழைக்கப்படும். 25 நாள் பயிரில் இந்த நோய் தாக்குதல் துவங்குகிறது. 50 நாள் பயிரில் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகி தண்டு, இலை, குருத்து, கதிர்களும் சேதமடைந்துவிடுகின்றன. இந்த அமெரிக்கப் படைப்புழுத் தாக்குதல் முதலில் அமெரிக்காவில் உள்ள மக்காச்சோள பயிரில் தான் துவங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்கப் படைப்புழு என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஆப்பிரிக்கா நாடுகளிலும், சிலி நாட்டிலும், இந்தியாவிலும் இந்த புழு தாக்குதல் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புழுக்களை ‘ஆர்மி வார்ம்’ என்றும் கூறுவார்கள். ஒரு ராணுவம் எப்படி அடுத்த நாட்டை தாக்கி முழுமையாக சேதப்படுத்துமோ அது போலவே இந்த ஆர்மி வார்ம் புழுக்கள் மக்காச் சோளத்தை முழுமையாக நாசம் செய்துவிடும். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, நியூமெக்சிகோ, அரிசோனா மற்றும் கனடாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆர்மி வார்ம் தாக்குதல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

மக்காச்சோளத்தில் தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்கப் படைப்புழுக்களில் 42 இனங்கள் உள்ளன. இவை 186 தாவரங்களை உண்ணுகின்றன. இந்த புழு மக்காச்சோள செடியின் இலை மற்றும் மக்காச்சோளத்தின் பூ, கதிரின் குருத்தையும் உண்ணும் தன்மை கொண்டவை. இந்த புழு செடியின் அனைத்து பாகங்களை தின்று தீர்த்துவிடக்கூடியது.தற்போது 2 வகையான புழுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 1. மக்காச்சோளத்தை தாக்கும் ஆர்மி வார்ம் (எம்), இன்னொன்று, நெற்பயிரை தாக்கும் ஆர்மி வார்ம் (ஆர்) ஆகும். ஆர்மி வார்ம் ஒரு ஆண்டுக்கு 1700 கி.மீ தூரம் பயணிக்கக்கூடியவை என வட அமெரிக்காவில் கணக்கிட்டுள்ளார்கள்.

2016ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிலும் மக்காச்சோளத்தில் இந்த புழுக்களின் தாக்குதல் துவங்கியது. பிறகு மேற்கு ஆப்பிரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. 10 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த புழு தாக்குதல் தீவிரமடைந்து, பின்னர் ஐரோப்பா, ஆஸ்திரேலியா என 44 நாடுகளை தாக்கியது. 22 மில்லியன் சதுர கி.மீ சுற்றளவிற்கு விளைந்துள்ள மக்காச்சோள பயிரில் பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த புழு தாக்குதலால் 300 மில்லியன் மக்கள் பட்டினிச் சாவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் துவங்கியது
இந்தியாவில் முதலில் கர்நாடகவில் விளையும் மக்காச்சோளத்தில் முதலில் தாக்குதல் நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் மக்காச்சோள பயிரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், குறிப்பாக பழனி பகுதியில் கடுமையான பாதிப்புக்குள்ளாகி விவசாயிகள் நிலைகுலைந்து உள்ளனர். பல லட்சம் ரூபாய் செலவு செய்து விளைவிக்கப்பட்ட மக்காச்சோள பயிரில் ஏற்பட்ட இந்த பாதிப்பின் காரணமாக விவசாயிகள் தற்கொலையின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

தமிழக விவசாயத்திற்கு ஆபத்து
தமிழகத்தில் பருவமழை பெய்யும் காலத்தில் ஏற்படும் குளிர்ச்சியான பருவநிலை காரணமாக மக்காச்சோள பயிரில் இந்த அமெரிக்கப் படைப்புழுத் தாக்குதல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கோவை, ஈரோடு,சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், விழுப்புரம், திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த மக்காச்சோளப்பயிரில் தாக்குதல் அதிகமாகும். இந்த புழுக்கள் லார்வா கட்டத்தில் இருந்து அந்துப்பூச்சிகளாக அடுத்த கட்டத்திற்கு மாறிவிடுகின்றன.

கதிரின் நுனியில் உள்ள காம்பு பகுதியையே இந்த புழுக்கள் பெரும்பாலும் உண்ணுகின்றன. இந்த புழுக்கள் பயிர் சாகுபடி செய்த 15நாளில் தோன்றி குருத்து பகுதியை உண்ணத்துவங்குகின்றன. தாய்ப்புழுக்கள் 200 முட்டைகள் இடுகின்றன. இந்த முட்டையிலிருந்து வெளியேறும் பச்சைநிற புழுக்கள் 20 நாட்களில் மண்ணுக்குள் சென்று கூட்டுப்புழுக்களாக மாறிவிடும். பிறகு 9 நாட்களில் தாய் அந்துப்பூச்சிகளாக மாறி 15 நாட்களில் முட்டையிடும். இந்த அந்துப்பூச்சிகளை ஒழித்துக்கட்டினால் மக்காச்சோள செடிகளை பாதுகாக்க முடியும். ஒரு ஹெக்டேருக்கு ஒரு விளக்கு பொறியை வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்க வேண்டும்.

பயிர்களில் உள்ள முட்டைக்குவியலை சேகரித்து அழிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் மக்காச்சோளத்தை பயிரிடுவதாலேயே இந்த புழுக்கள் உருவாகிறது. மாற்றுப்பயிர் பயிரிட வேண்டும். இந்த புழுக்களை கட்டுப்படுத்த தனிப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லை. பருத்தி, மிளகாய் புழுக்களான புரோடினியா புழுக்களைக்கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்தின் மூலம் இந்த அமெரிக்கப் படைப்புழுவை அழிக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சோதனை செய்து கண்டறிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
அலட்சியத்தின் உச்சத்தில் வேளாண் அதிகாரிகள்

ஆனால் கள நிலவரம் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை. வேளாண் அதிகாரிகள் அலட்சியத்தின் உச்சத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.இது குறித்து அருகே வாகரை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மக்காச்சோள ஆராய்ச்சி மைய அதிகாரிகளிடம் இந்த புழு தாக்குதல் குறித்து விவசாயிகள் கேட்ட போது மழை பெய்தால் இந்த புழுக்கள் செத்துவிடும் என்று அலட்சியமாக பதில் அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். எந்த ஒரு விவசாயத் துறை அதிகாரியும் இந்த பாதிப்பு குறித்து எங்களிடம் விசாரிக்கவோ, ஆய்வு செய்யவோ வரவில்லை என்பது அதை விட வேதனையளிக்கக்கூடிய ஒன்றாகும். எவ்வளவு மருந்தடித்தாலும் இந்த புழுக்களை கொல்ல முடியவில்லை.

முன்பெல்லாம் விவசாயத்துறை அதிகாரிகள் தோட்டத்திற்கு வந்து ஆய்வு செய்து இந்த மருந்தை அடியுங்கள், இந்த உரத்தை இடுங்கள் என்றெல்லாம் அறிவுரை கூறுவார்கள். இப்போது அப்படி எந்த விவசாயத்துறை அதிகாரியும் வருவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் இந்த பாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க முன்வரவேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ் கூறுகையில், அமெரிக்கப் படைப்புழு, மக்காச்சோள குருத்திலும், விளைந்த சோளத்திலும் புகுந்து நாசமாக்குகிறது; ஒரு சோளத்தில் 5 புழுக்கள் வரை புகுந்து தின்று தீர்க்கிறது; அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்; பல லட்சம் ரூபாய் செலவு செய்து மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது; எனவே காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக – ஆய்வு செய்து உரிய இழப்பீடு தர வேண்டும்; அரசு, விவசாயிகளைப் பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
– இலமு, திண்டுக்கல்.

Leave a Reply

You must be logged in to post a comment.