===வீ.பழனி===
கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம் என முழங்குகிறோம். போர்களின் வரலாற்றை அறிந்து கொண்டால். இந்த முழக்கம் இன்னும் வலுப்படும்.

1914 ஆகஸ்ட் 4 அன்று முதல் உலகப் போர் மூண்டது.ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் பிரான்சிஸ் பெர்னாந்தும் அவருடைய மனைவியும் 1914 ஜூன் 28 அன்று காரில் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன் செர்பியா நாட்டைச் சேர்ந்தவன் .எனவே செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது.நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டது. ஜெர்மனியைத் தொடர்ந்து ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் போரில் ஈடுபட்டன.

நேச அணியில் 12 நாடுகள்- பிரிட்டன் (அதன் சாம்ராஜ்யம்) பிரான்ஸ், இத்தாலி ,அமெரிக்க ஐக்கிய நாடுகள் ,பெல்ஜியம், ஜப்பான், சீனா, ருமேனியா, கிரீஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் இருந்தன. மறுபக்கத்தில் ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி , பல்கேரியா ஆகிய நாடுகள் இருந்தன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் யுத்தம் தொடங்கிய மூன்றாவது வருடமே போரில் நேரடியாக இறங்கியது. அதுவரையிலும் தனது நட்பு நாடுகளாகிய பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் ஆயுதங்களை விற்பனை செய்து வந்தது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பின்னடைவை சந்தித்த நிலையில் அமெரிக்கா நேரடியாக யுத்தத்தில் இறங்கியது. ஜெர்மன் போர்க் கப்பல்கள் அமெரிக்க கப்பல்களை தாக்கியதுவும் அமெரிக்கா போரில் ஈடுபடுவதற்கு ஓர் உடனடிக் காரணம் ஆயிற்று.

அமெரிக்கா போரில் இறங்கியது
அமெரிக்கா 1917ஆக 16 அன்று போரில் நேரடியாக இறங்கியது. இரண்டு அணிகளுக்கும் இடையில் சமமான போட்டி இருந்ததாகக் கூற முடியாது. ஜெர்மனி மட்டும் தனது அணியில் வலுவான ஒரே நாடாக இருந்தது. எதிர் முகாமில் பல பெரிய வலுவான நாடுகள் இருந்தாலும் ஜெர்மனி இந்த நான்கு ஆண்டுகளிலும் மற்ற அனைத்து நாடுகளையும் சிக்கலிலேயே வைத்திருந்தது. ஜெர்மனியின் நவீன ஆயுத பலமே இதற்கு பிரதான காரணம். நேச நாடுகளைப் பொறுத்தமட்டிலும் பிரெஞ்சு ராணுவம் தலையாய பங்கு வகித்தது. இங்கிலாந்து கடல் யுத்தம் ,ராஜதந்திரம் ,பிரசாரம் இவற்றில் முன்னணியில் நின்றது.

ரஷ்யா தான் பெரும் இழப்புகளைச் சந்தித்த நாடு.அமெரிக்கா தாமதமாகப் போரில் ஈடுபட்டாலும் ஜெர்மனியைக் தோற்கடிப்பதில் தீர்மானகரமான பங்கு வகித்தது.
அனைத்து முன்னணி நாடுகளும் போரில் ஈடுபட்டன. ஐரோப்பாவில் ஸ்பெயின், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து,N மற்றும் ஸ்காண்டிநேவியன் நாடுகள் தவிர மற்ற அனைத்து நாடுகளும் போர்க்களத்தில் இருந்தன.

உலகில் இதுவரையிலும் நடந்த போர்களில் முதன் முறையாக படைகள் கடல் கடந்து அனுப்பி வைக்கப்பட்டன.கனடா நாட்டினர் பிரான்சில் சண்டையிட்டனர். அமெரிக்கர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பாவிலும் சண்டையிட்டனர். ஆப்பிரிக்கர்கள் பிரெஞ்சு ராணுவத்தில் இடம் பெற்றிருந்தனர்.

பெருமளவிலான மக்கள் இந்தப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர்
பிரிட்டன் தனது மக்கள் தொகையில் (ஆண்கள்) 12. 5 சதவீதம் பேரையும் ஜெர்மனி 15.4% பேரையும் பிரான்ஸ் 17% பேரையும் போரில் ஈடுபடுத்தியது.இரண்டாம் உலகப்போரில் இந்த எண்ணிக்கை சராசரி 20% ஆக உயர்ந்தது என்பது வேறு விஷயம்.

கி.பி 1816 முதல் 1965 வரை 74 சர்வதேச யுத்தங்கள் நடந்துள்ளன. இவற்றில் முதல் பெரிய 4 யுத்தங்களும் இருபதாம் நூற்றாண்டில் நடந்தவை .இவை இரண்டு உலகப்போர்களும் 1937- 39 ல் சீனா மீது ஜப்பான் நடத்திய யுத்தமும் கொரிய யுத்தமும் ஆகும். 1871 முதல் 1914 வரையிலும் ஆன ஆண்டுகள் போர் நடைபெறாத ஆண்டுகள் ஆகும்.
முதல் உலகப் போரில் முதன் முதலாக விமானங்களும் கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் பயன்படுத்தப்பட்டன.

ஜெர்மனி எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டதையும் மீறி விஷப் புகையைப் பயன்படுத்தியது. முகமூடி அணிந்த ஜெர்மனி வீரர்களுக்குப் பின்னால் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்களைத் தாங்கிய குதிரை வண்டிகள் அணிவகுத்து வரும். எதிரிப் படைகளை நெருங்கியவுடன் சிலிண்டர்கள் திறக்கப்படும். எதிரிப் படை வீரர்கள் நூற்றுக்கணக்கில் செத்து மடிவார்கள்.

பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா வெற்றியடைந்தன. இந்த நாடுகளின் (நேச நாடுகள்) படைகள் 1918 நவம்பர் 11 அன்று பெர்லின் நகரில் நுழைந்தன.சிறிது நேரத்தில் ஜெர்மனி சரணடைந்தது. ஜெர்மன் மன்னர் கெய்சர் முடி துறந்தார். ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

2 கோடி பேர் பலியான துயரம்
1561 நாட்கள் நடைபெற்ற முதல் உலகப்போரில் 2 கோடி பேர் மரணம் அடைந்தனர். யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக்காய்ச்சலால் சுமார் 2 கோடி பேர் மரணம் அடைந்தனர். சுமார் 40 லட்சம் கோடி டாலர் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
1918 ஜூன் 28 அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனியின் படை திரட்டும் உரிமை பறிக்கப்பட்டது. நேச நாடுகளுக்கு ஜெர்மனி பெருந்தொகையினை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டியதாயிற்று. ஜெர்மனியின் சில வளமான பகுதிகளை பிரான்ஸ் எடுத்துக் கொண்டது.

போரின் பின் விளைவாக பல தேசிய இனங்களைக் கொண்ட ஆஸ்திரியா உடைந்து சிதறியது. யூகோஸ்லேவியா, போலந்து – செக்கோஸ்லா வாக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாகின.
பெரும் யுத்தம்(Great war) என்று அழைக்கப்பட்ட இந்த யுத்தம் ஐரோப்பா முழுவதையும் ஆசிய- ஆப்பிரிக்காவின் சில பகுதிகளையும் நாசமாக்கியது. பல லட்சம் இளைஞர்கள் இந்த யுத்தத்தில் மாண்டு போயினர்.

தேசிய வெறி
யுத்தத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டை ஆக்கிரமிப்பாளன் என்றும் தான் தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறிக் கொண்டன. ரஷ்யா மற்றும் பிரான்ஸ் மீது ஜெர்மனி குற்றஞ்சாட்டியது. சின்னஞ் சிறிய பெல்ஜியம் நாட்டுக்கு ஆதரவாகப் போரில் ஈடுபடுவதாக இங்கிலாந்து கூறியது. உண்மைகள் மறைக்கப்பட்டு பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தனி நபர் உரிமைகள் பறிக்கப்பட்டன. நிலவரத்தின் ஒரு பக்கம் மட்டுமே மக்களுக்குச் சொல்லப்பட்டது. மறுபக்கம் முற்றாக மறைக்கப்பட்டது. பத்திரிகைகள் தேசிய வெறியை கிளப்பியும் தங்கள் ஆட்சியாளர்களைப் புகழ்ந்தும் பக்கம் பக்கமாக எழுதின. யுத்தம் ஒரு தேவை என்று வாதிடும் புத்தகங்கள் எழுதப்பட்டன. யுத்தம் என்பது உயிரியியல் தேவை (biological necessity) மனித முன்னேற்றத்திற்கு தேவை என்றும் எழுதப்பட்டது. குறிப்பாக ஜெர்மனி மன்னர் கெய்சர் புகழ்ந்து தள்ளப்பட்டார்.

ரஷ்கின் என்ன எழுதினார்…
இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ரஷ்கின் இவ்வாறு எழுதினார்:”அனைத்து பெரிய நாடுகளும் வார்த்தைகளின் உண்மையான பொருளையும் சிந்தனையின் வலிமையினையும் போரின் போது தான் கற்றுக் கொள்கின்றன. அமைதி அவர்களை ஒன்றுமில்லாததாக்குகிறது. யுத்தம் மூலம் கற்பிக்கப்படுகின்றனர். அமைதி மூலம் ஏமாற்றப்படுகின்றனர். யுத்தம் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அமைதி மூ லம் துரோகம் இழைக்கப்படுகின்றன. ஒரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் அவர்கள் யுத்தத்தில் பிறக்கின்றனர். அமைதியில் இறந்து போகின்றனர்” என்று எழுதினார்.

ரஷ்யப் புரட்சி
1917 மார்ச் 15ல் முதல் ரஷ்யப் புரட்சி நடந்தேறியது. ஜார் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா ஜெர்மனிக்கு எதிராக போரிட தயாராக இல்லை. எனவே ஜெர்மனிக்கு கிழக்கு முனையில் எந்த ஆர்வமும் இல்லை. எனவே ஜெர்மன் தனது படைகள் முழுவதையும் மேற்கு முனையில் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுக்கு எதிராக நிறுத்தியது. இது ஜெர்மனிக்கு மிகவும் சாதகமாக இருந்தது. 1917 அக்டோபர் 24ல் மாபெரும் சோவியத் தொழிலாளி வர்க்க சோசலிஸ்ட் புரட்சி மாமேதை லெனின் தலைமையில் வெற்றிகரமாக நடந்தேறியது. சோவியத் அரசு 1918 மார்ச்சில் ஜெர்மனியுடன் அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

யுத்தம் தொடங்கிய மண்ணாகிய செர்பியாவின் பாட்டாளிகள் ரஷ்யாவின் யுத்த எதிர்ப்பு முன்னுதாரணத்தைப் பின் தொடர்ந்தனர். பல்கேரியா சோசலிஸ்டுகளும் கனடா, இத்தாலி, அமெரிக்க சோசலிஸ்ட் கட்சிகளும் ஆஸ்திரியா, நியூசிலாந்தில் ஒரு சிறு பகுதியினரும் யுத்த எதிர்ப்பு அணிவகுப்பில் நின்றனர்.

ஏகாதிபத்தியம்
முதல் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே “ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனும் நூலை லெனின் எழுதினார். ஏகாதிபத்திய யுகத்திற்கு ஏற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்த லெனினது அரிய படைப்புகளில் இது ஒன்று. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்றும் அதற்கு முந்தைய வளர்ச்சிக் கட்டத்தில் இருந்து ஒட்டுண்ணி கட்டத்திற்கும் அழியும் கட்டத்திற்கும் மரண நிலையையும் அடைகிறது என்றும் இந்த நூலில் விளக்கப்பட்டது. முதலாளித்துவ அமைப்பு மரணப்படுக்கையில் இருக்கிறது என்றும் தொழிலாளி வர்க்க புரட்சியை ஏகாதிபத்தியம் துவக்கி வைத்தது என்றும் லெனின் குறிப்பிட்டார்.

ஏகாதிபத்திய கட்டத்தில் முதலாளித்துவ அமைப்பில் அசமத்துவ வளர்ச்சியும் முதலாளித்துவ முரண்பாடுகளும் தீவிரமடையும். சந்தைகளுக்காக, முதலாளித்துவ ஏற்றுமதிகளுக்காக, காலனிகளுக்காக உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கு யுத்தங்கள் வரும் என்ற கருத்தை லெனின் முன் வைத்தார்.

ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு இந்த அசமத்துவ வளர்ச்சியே காரணம் என்றும் இந்த யுத்தங்கள் ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்தும் என்றும் ஏகாதிபத்திய இணைப்பில் பலவீனமான கண்ணி உடைபடும் என்று லெனின் தீர்க்கதரிசனமாக கூறினார்.
இன்று முதல் ஏகாதிபத்திய யுத்தம் நடந்து நூறு ஆண்டுகள் ஆகிறது. இன்றைக்கும் ஏகாதிபத்தியம், யுத்தங்களை நோக்கித்தான் நடைபோகிறது. சோசலிச சக்திகள்தான் அன்றைய வலியுறுத்துகின்றன.

ஏகாதிபத்தியம் வீழ்த்துவோம்! அமைதிக்கான போராட்டத்தை உறுதியோடு முழங்கிடுவோம்!

கட்டுரையாளர் : சிபிஐ (எம்) நெல்லை மாவட்ட மூத்த தலைவர்

Leave a Reply

You must be logged in to post a comment.