பெங்களூரு:
அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 20 கோடி லஞ்சம் கொடுப்பதாக கூறி, நிதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் உள்ள குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் சனிக்கிழமையன்று சரணடைந்தார்.
இவர் ஏற்கனவே சுரங்க முறைகேடுகளில் சிக்கி ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சையத் அகமது ஃப்ரீத் என்பவர் ஆம்பிடெண்ட் என்ற நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ. 600 கோடி வரை மோசடி செய்துள்ளதாக பெங்களூரு குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் சையத் அகமது ஃப்ரீதை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கர்நாடக பாஜக‌ முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான‌ ஜனார்த்தன ரெட்டி அவருடன் சேர்ந்து நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

அதாவது ஜனார்த்தன ரெட்டி தனக்கு மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் சையத் அகமது ஃப்ரீத் மீதான வழக்குகளைச் சாதகமாக்க முடியும் என்று கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக சையத் அகமது ஃப்ரீத்திடம் ரூ. 21 கோடி பெற்றுள்ளார். அதில் ரூ.3 கோடி ரொக்கமாகவும், ரூ.18 கோடி மதிப்புள்ள 57 கிலோ தங்கத்தையும் ஜனார்த்தனரெட்டி பெற்றதாக காவல்துறையினரிடம் சையத் அகமது ஃப்ரீத் வாக்குமூலம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜனார்த்தன ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரைக் கைது செய்யத் துணை ஆணையர் மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் 4 படைகள் அமைத்து பெங்களூரு, பெல்லாரி, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் தீவிரமாக தேடினர்.

இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் உள்ள குற்றப் பிரிவு காவல்துறை அலுவலகத்தில் சனிக்கிழமையன்று சரணடைந்தார். ஏற்கெனவே சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி, ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜனார்த்தன ரெட்டி மீண்டும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.