அகமதாபாத்:
‘ஹரேன் பாண்ட்யா’ – இந்தப் பெயரைத் தெரியாதவர்களுக்கு!

ஹரேன் பாண்ட்யா… குஜராத்தில் கேஷூபாய் பட்டேல் முதல்வராக இருந்த பொழுது உள்துறை அமைச்சராக இருந்தவர். பாஜக-வின் உள் குழப்பத்திற்கு இடையே 2001-இல் நரேந்திர மோடி முதல்வரான பின்னர், 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி நடைபயிற்சியின் பொழுது கொடூரமாக கொல்லப்பட்டவர்.

மோடி மீது தந்தையின் பகிரங்க குற்றச்சாட்டு!
பாண்ட்யாவின் தந்தை விதால்பாய் தனது மகனின் மரணம் ‘ஒரு அரசியல் படுகொலை’ எனவும் அன்றைய முதல்வர் ‘மோடிதான் பாண்ட்யாவின் படுகொலைக்கு காரணம்’ எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பாண்ட்யாவின் மனைவியும் தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு நீதிகேட்டுப் போராடினார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் கூட சரியாக விசாரணை கதவை திறக்கவில்லை. மோடியின் பரம எதிரி அகமது பட்டேலை பல முறை பாண்ட்யாவின் மனைவி சந்தித்து உதவிட கோரினார். அவரும் உதவவில்லை. இறுதியில் பாண்ட்யாவின் மனைவியை பாஜக தனது கட்சியில் இணைத்து பதவியையும் தந்தது.இத்துடன் இந்த வழக்கு புதைந்துவிட்டது என பாஜக-வினர் குறிப்பாக உயர்மட்டத்தில் இருப்பவர்கள் நினைத்தனர். உண்மைக்கு ஒரு வினோத குணம் உண்டு. இனி எழாது என பொய் முடிவுக்கு வரும் பொழுது திடீரென உண்மை விசுவரூபம் எடுக்கும். அப்படித்தான் இப்பொழுதும் உண்மை மீண்டும் எழுந்துள்ளது.

தெலுங்கானாவில் வேறொரு வழக்கில் நடந்த விசாரணையின் பொழுது ஆசம்கான் எனும் ஒரு பழைய குற்றவாளி குஜராத் காவல்துறை அதிகாரியான ‘வன்சராவின் திட்டப்படிதான் ஹரேன் பாண்ட்யாவை கொல்ல பிரஜபாதி மற்றும் இன்னொருவரை சோராபுதீன் நியமித்தார்’ என தற்போது கூறியிருக்கிறார். இது மீண்டும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
சோராபுதீன் மற்றும் பிரஜாபதி இருவருமே எண்கவுண்ட்டர் கொலை செய்யப்பட்டனர் என்பதும் அதில் வன்சராவுக்கு நேரடி தொடர்பு உள்ளதும் அனைவரும் அறிந்த இரகசியம். இந்த படுகொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாஜக தலைவர் அமித்ஷாவும் ஒருவர் என்பதும் நாடறிந்த உண்மை.

வன்சராவுக்கு இன்னொரு மிகப்பெரிய தகுதி உண்டு. அது வன்சரா மோடியின் செல்லப்பிள்ளை
என்பதாகும். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகுதான் வன்சரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மோடி – பாண்ட்யா இடையே நிலவிய மோதல்கள்
பாண்ட்யாவின் தந்தை அவரது படுகொலையில் மோடி மீது ஏன் குற்றச்சாட்டு சொல்ல வேண்டும்? ஏனெனில் மோடியின் அதிகாரத்தை பாண்ட்யா ஏற்கவில்லை. மோடி முதல்வராக பொறுப்பேற்று 6 மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது சட்டவிதி! அதற்கு ஏதுவான தொகுதி எது என ஆய்வு செய்த பொழுது எல்லீஸ் பிரிட்ஜ் எனும் தொகுதிதான் அவர் கவனத்திற்கு வந்தது. இந்த தொகுதி உறுப்பினர் ஹரேன் பாண்ட்யா! எனவே ராஜினாமா செய்யுமாறு பாண்ட்யாவை மோடி வற்புறுத்தினார். ஆனால் பாண்ட்யா மறுத்துவிட்டார். பின்னர் வேறு தொகுதியில் போட்டியிட்டு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் மோடி வென்றார்.

சிலருக்கு ஒருவர் மீது பகை வந்துவிட்டால் அது தீராத வன்மமாக வெளிப்படும். அப்படித்தான்
பாண்ட்யா தனது உள்துறை அமைச்சர் பதவியை இழந்தார். 2002-ஆம் ஆண்டு தேர்தலில் பாண்ட்யாவுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்பட வில்லை. எனவே பாண்ட்யா வாஜ்பாயிடமும் அத்வானியிடமும் புகார் கூறினார். அவர்களும் மோடியிடம் பேசினர். ஆனால் மோடி நானா? பாண்ட்யாவா? யார் வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் என மிரட்டினார். குஜராத் கலவரங்கள் பின்னணியில் மோடியை அகற்றினால்
சிக்கல் என எண்ணிய பா.ஜ.க. தலைமை பாண்ட்யாவை கை கழுவியது.

மனதளவில் வெகுண்ட பாண்ட்யா குஜராத் வன்முறை வெறியாட்டத்தில் மோடி அரசாங்கத்தின் சதியை பகிரங்கபடுத்த முன்வந்தார். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல மோடி நிர்வாகத்தின் பல சூழ்ச்சிகளின் முடிச்சுகளை அவிழ்க்க ஆரம்பித்தார் பாண்ட்யா. இந்த சமயத்தில்தான் பாண்ட்யா கொல்லப்பட்டார்.

மோடிக்கும் பாண்ட்யாவுக்கும் இடையே இருந்த பகை குஜராத்தில் அனைவரும் அறிந்த ஒன்று! அதனால்தான் பாண்ட்யாவின் தந்தை மோடிக்கு
எதிராக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்தார்.

ஆசம்கானின் வாக்கு மூலம் எழுப்பும் கேள்விகள்
ஆசம்கான் எனும் குற்றவாளி வன்சராவுக்கு நெருக்கமானவர் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உண்டு. அதே போல சொரபுதீனும் குற்றவாளியாக இருந்தாலும் அவரும் வன்சராவுக்கு நெருக்கமானவரே என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு.
அப்படியானால் ஆசம்கான் இப்பொழுது அம்பலப்படுத்தும் உண்மை பல கேள்விகளை எழுப்புகிறது:

l ஆசம்கான் இந்த உண்மையை இப்பொழுது சொல்வதன் பின்னணி என்ன?

l வன்சாராவும் பாண்ட்யாவும் நெருக்கமாகவே இருந்தனர். அப்படி இருக்கும் பொழுது ஏன் பாண்ட்யாவை கொல்ல வன்சரா ஆட்களை நியமிக்க வேண்டும்?

l வன்சாரா தானாக இதனை செய்ய வாய்ப்பு இல்லை. அவருக்கு பின்னால் இருந்தவர்கள் யார்?

l வன்சாரா யாருக்காக அல்லது யாரை காப்பாற்ற இதனை செய்தார்?
இவையெல்லாம் இன்று மீண்டும் விசுவரூபம் எடுக்கும் கேள்விகள் ஆகும்.
ஆனால், இந்த கொலை வழக்கை மூடி மறைப்பதற்குதான் ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளனர். பாண்ட்யா கொலை வழக்கை மத்திய புலனாய்வுக் கழகம் சரியாக விசாரிக்கவில்லை என்பது பாண்டயா குடும்பத்தினரின் குற்றச்சாட்டும் ஆகும்.
ஹரேன் பாண்ட்யாவின் நெருங்கிய நண்பர் களில் ஒருவர் பிரசாந்த் தயாள். இதழியாளரும் கூட!

அவர் பாண்ட்யாவின் மனைவி ஜக்ருதி பாண்ட்யாவிற்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். ஆசம்கானின் வாக்கு மூலத்திற்கு பிறகு மீண்டும் வழக்கை அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும் எனவும் பாண்ட்யாவை கொன்ற கொலை யாளிகளை உலகுக்கு அடையாளப்படுத்த வேண்டும் எனவும் அதற்கு ஜக்ருதி பாண்ட்யா முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜக்ருதி என்ன முடிவு எடுப்பார் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.அதேபோல ஆசம்கான் உயிரோடு நடமாடுவாரா அல்லது என்கவுண்ட்டர் அல்லது விபத்தில் இறப்பாரா என்பதற்கும் காலம்தான் பதில்  சொல்லும். எனினும் ஒரு உண்மை தெளிவு! இந்த தேசத்தை ஆள்பவர்கள் எத்தகையவர்கள் என்பதை ஆசம்கானின் வாக்கு மூலம் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
நவீன தாராளமய பொருளாதார கொள்கை களும் மதவாதமும் இணைந்து எதேச்சதிகாரத்திற் கான பாதையை உருவாக்கியுள்ளன. இந்த புறச்சூழல் மட்டுமல்ல; ஆள்பவர்களின் அகமும் எதேச்சதிகாரத்தின் உச்சத்தில் இருந்தால் அதன் முதல் பலி ஜனநாயகம்தான்! தன்னை எதிர்ப்பவர்கள் மற்ற கட்சிகளில் மட்டுமல்ல; தனது கட்சியிலும் இருக்கக் கூடாது எனும் சர்வாதிகார அணுகுமுறை மிகவும் ஆபத்தானது. இந்த ஆபத்தை அகற்றுவது அதாவது மோடி ஆட்சியை வீழ்த்துவது இன்றைய மிகப்பெரிய கடமையாக ஜனநாயக சக்திகள் முன் உள்ளது.

– அ.அன்வர் உசேன்
1) Namo story / Kingshug Nag – 2) தி வயர் மின் இதழ்

Leave a Reply

You must be logged in to post a comment.