சென்னை:
சேலத்தில் யார் யாரையோ சந்திக்கும் தமிழக முதலமைச்சர், மனிதத்தன்மையற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஏன் ஆறுதல் கூறவில்லை என்று மாதர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம், மனிதி, பி.எஸ்.என்.எல். பெண் ஊழியர் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் பெண்கள் சங்கம், தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கம் உள்ளிட்ட 32 பெண்கள் அமைப்பின் சார்பில் சென்னையில் வெள்ளியன்று (நவ. 9) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பி.சுகந்தி (மாதர் சங்கம்), மஞ்சுளா ( மாதர் சம்மேளனம்), மாலதி (சிஐடியு), ஹேமா (பி.எஸ்.என்.எல்.), சர்வமங்களா (எல்.ஐ.சி), ஷீலு ( தமிழக பெண்கள் இணைப்புக் குழு), எழுத்தாளர் ஜீவசுந்தரி, கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் தந்தை சாமிவேல், தாயார் சின்ன பொன்னம்மா, சகோதரி அருள்ஜோதி, சகோதரன் சற்குருநாதன் மற்றும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பி.சுகந்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்பட்டியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற 13 வயது தலித் சிறுமி மிகக் கொடூரமாக தாயின் கண் எதிரே வெட்டி
படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 32 பெண்கள் அமைப்புகள் இணைந்து இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு கண்டன இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தாயின் கண்எதிரிலேயே படுகொலை
சேலம் மாவட்டம் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யின் சொந்த மாவட்டமாகும். அந்த மாவட்டத்தில் பொதுவாகவே பெண்கள்,சிறுமிகள் மீதான வன்முறைகள் சமீபகாலமாக அதிகளவில் நடைபெறு கின்றன. சம்பவத்திற்கு பிறகு முதலமைச்சரோ, அந்த மாவட்ட அதிகாரிகளோ, காவல் துறை கண்காணிப்பாள ரோ இதுநாள் வரை அவர்கள் வீட்டிற்கு சென்று சந்திக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் ச்சம்பவத்திற்குகண்டனம் தெரிவித்து வரும் வேளையில் தமிழக அரசு மவுனம் காப்பதை பெண்கள் அமைப்புகள் வன்மையாக கண்டிக்கிறோம்.

குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்குக!
சிறுமியின் குடும்பத்திற்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். முதலில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டதே தவிர,
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பெண்கள் அமைப்புகள்,
மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகே போக்சோ சட்டப் பிரிவில்
வழக்குப் பதிவு செய்யப்பட்டது.பொதுவாக பல்வேறு வழக்குகளில் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. எஸ்.சி., எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தயார் செய்ய வேண்டும், 120 நாட்களுக்குள் வழக்கு விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கிலும் 60 நாட்களுக்கும் குற்றப்பத்திரிகை தயார் செய்து, 120 நாட்களுக்குள் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குக!
ராஜலட்சுமியின் சகோதரி அருள்ஜோதி செவிலியர் படிப்பு முடித்திருக்கிறார்.அவரது
சகோதரர் சற்குருநாதன் 10ஆம் வகுப்பு படித்திருக்கிறார். எனவே அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தளவாய்பட்டியில் அதிகமாக தலித் மக்கள்தான் வசிக்கிறார்கள். மற்ற பிரிவைச் சேர்ந்த ஓரிரு குடும்பங்கள் மட்டுமே அங்கு வசிக்கின்றன. தலித் மக்கள் அதிகமாக வசிக்கக் கூடிய பகுதியிலேயே அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. தலித் மக்கள் வசிக்கும் அந்த பகுதியில் குடிதண்ணீர் வசதி கிடையாது.அந்த பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குடிப்பதற்கு நீர் இல்லாத காரணத்தில் அங்குள்ள சில குடும்பங்கள் தினேஷ்குமார் வீட்டு கிணற்றில் போய் குடிதண்ணீர் எடுக்க வேண்டிய நிலைஇருந்தது. அந்த பகுதி மக்களுக்கு முறை
யாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டிருந்தால் இந்த கொலை நடைபெற்றிருக்காது என்று அந்த ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்த பகுதியில் ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு செய்யவில்லை என்றால் இந்த 32 பெண்கள் அமைப்புகளும் இணைந்து அந்த பகுதியில் போர் அமைத்து குடிநீருக்கான ஏற்பாட்டை செய்வோம்.

பிணையில் விடக்கூடாது
இந்த வழக்கில் விசாரணை முடியும் வரைகுற்றவாளி தினேஷ்குமாரை பிணையில் விடக்கூடாது. இந்த வழக்கில் சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ராஜலட்சுமியை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய முறையில் கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும். அந்த குடும்ப
த்திற்கு 25 லட்ச ரூபாய் அரசு வழங்க வேண்டும். இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.தமிழகத்தில் எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை செயலர் மறுப்பு
பின்னர் ராஜலட்சுமியின் சகோதரி அருள்ஷோரி, தாயார் சின்ன பொன்னம்மா ஆகியோர்
அந்த படுபயங்கர சம்பவம் குறித்து கதறலுடன் விவரித்தனர்.பின்னர் 32 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், ராஜலட்சுமியின் குடும்பத்தினரும் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செய
லாளர் கிரிஜா வைத்தியநாதனைச் சந்திக்கச்சென்றனர். அப்போது தலைமைச் செயலாளர், ராஜலட்சுமியின் குடும்பத்தில் இருவரும்,பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலரும் மட்டுமே வர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு ராஜலட்சுமியின் தந்தை சாமி வேல். எங்கள் குடும்பத்தைதான் அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இங்கே உங்களை சந்திக்க வந்த எங்கள் 4 பேரையும் அனுமதிக்கக் கூடாதா எனக் கேட்டுள்ளார். இதற்கு தலைமைச் செயலாளர் அனுமதி மறுக்கவே அவர் அங்கிருந்து எழுந்து வந்து விட்டார். இதையடுத்து யாருமே தலைமைச்செயலாளரை சந்திக்காமல் திரும்பி வந்து விட்டதாக பி.சுகந்தி தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.