சென்னை:
மூளை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை வரும் 29ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூளை பாதிப்புக்குள்ளாகிய 10 வயது மகனைக் கருணைக் கொலை செய்யக் கோரி கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது அனிருதா மருத்துவ அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். இதையடுத்து, அந்த மையத்தில் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவனின் தந்தை திருமேனி ஆஜராகி, தன் மகனின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். நீதிமன்றத்திற்கு வந்ததால் தனக்கு இந்த உதவி கிடைத்ததாகவும், இந்த சிகிச்சை குறித்து மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும், அவர் கேட்டுக்கொண்டார்.

ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்ற மாற்று மருத்துவமுறைகள் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று திருமேனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் வலியுறுத்தினார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், நாடு முழுவதும் மூளை பாதிப்புக்குள்ளாகி, செயலிழந்த நிலையில் இருக்கும் சிறுவர்களின் சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை வரும் 29ஆம் தேதிக்குள் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தனர். அதனைத் தாக்கல் செய்யாவிட்டால், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: