திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட வாழை இலை உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. அது குறித்து சிறப்பு செய்தி தொகுப்பு வருமாறு:

வாழை இலையில் உணவும், மிளகும் இருந்தால் போதும் எதிரியின் வீட்டில் கூட உணவருந்தலாம் என்று தமிழக சித்தர்கள் வாக்காகும். விஷத்தை முறிக்கும் தன்மை வாழை இலைக்கும், மிளகுக்கும் உண்டு என கூறப்படுகிறது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்தது வாழை இலை ஆகும். வாழை இலையில் உணவு சாப்பிடுவது மருத்துவ குணம் வாய்ந்தது என்றும், தமிழர்கள் பாரம்பரியமாக வாழை இலையில் உணவு சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு வருகிறது. தென் கிழக்கு ஆசியா முழுக்க வாழை இலையில் உணவு வைத்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில மக்கள் வாழை இலையில் உணவு சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். இந்தியா மற்றும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர, மெக்சிகோ, டொமினிக்கன் குடியரசு உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது, இந்து மற்றும் பௌத்த திருவிழாக்களில் வாழை இலையில் உணவு சாப்பிடுவது வழக்கம். வாழை இலையின் மகத்துவம்
வாழை இலையில் பாலிஃபினைல் என்ற வேதிப்பொருள் உள்ளது. வாழை இலை ஒரு ஆண்டி ஆக்சிடன்ட் என்று கூறப்படுகிறது. இளவயதில் முதுமை, புற்றுநோய், இதய நோய் போன்றவற்றுக்கு வாழை இலையில் உணவு சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்களை முறியடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இலையில் சூடான உணவை பரிமாறி அதை உண்ணும் போது வாழை இலையில் உள்ள பாலிஃபினையில் உணவால் உறிஞ்சப்பட்டு நமது உடலில் சேர்க்கப்படுகிறது. மேலும் பாக்ட்ரியாக்களை, நோய்க்கிருமிகளை எதிர்க்க வல்ல வேதிப்பொருட்களும் இந்த வாழை இலையில் உள்ளது. இதனால் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இந்த இலையில் உள்ள குளோரோபில் உடலில் உள்ள அல்சர் மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. அதோடு ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

தில்லிக்கு ஏற்றுமதியாகும் வாழை
இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழை இலைக்கு தமிழகத்தில் பெயர் பெற்ற ஊர் உண்டெனில் அது திண்டுக்கல் தான். திண்டுக்கல் நகரில் இருந்து தில்லி, பெங்களூர் ஆகிய பெருநகரங்களுக்கு ஏற்றுமதியாகிறது. திண்டுக்கல் மட்டுமல்லாமல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

சக்திவேல் (அகரம் விவசாயி)
மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல முக்கிய தமிழக நகரங்களில் வாழைத் தோட்டங்களில் வாழை இலை உற்பத்தியானாலும் திண்டுக்கல்லில் உற்பத்தியாகும் வாழை இலை மிகவும் தரம் வாய்ந்ததாகவும், மற்ற ஊர்களில் விளையும் வாழை இலை 3 நாட்கள் கூட தாக்குப்பிடிக்காத நிலையில் திண்டுக்கல் வாழை இலை 10 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் தன்மை உள்ளதாக அகரம் பகுதி விவசாயி சக்திவேல் நம்மிடம் தெரிவித்தார்.

குமார் (ஏற்றுமதியாளர்)
திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் வாழை இலை வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. தற்சமயம் நாடு முழுவதும் கந்த சஷ்டி விரதம் துவங்கி உள்ளது. இதற்காக திண்டுக்கல் வாழை இலைக்கு நல்ல கிராக்கி கிடைத்துள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து தில்லியில் உள்ள மலாய் மந்திர் என்ற முருகன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் அன்னதானத்திற்கு வாழை இலை அனுப்புகிறோம். இதேபோல் பெங்களூருக்கும் செல்கிறது. மற்ற ஊரில் விளையும் வாழை இலையை விட திண்டுக்கல் வாழை இலை தரமாக இருப்பதற்கு காரணம் திண்டுக்கல் வாழை தோட்டங்கள் செம்மண் தோட்டங்களாக உள்ளன. வாழை இலையில் உணவு சாப்பிடுவதை வடநாட்டு மக்கள் விரும்புகிறார்கள். வாழை இலையில் உணவை வேக வைத்தால் அந்த உணவு கெடாது, மேலும் உடலுக்கு நல்லது. சக்கரபாணி (விவசாயி சின்னாளபட்டி)
தற்போது உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு பரிமாறப்படுகிறது. இதனால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. எனவே அரசு பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து மீண்டும் மக்கள் வாழை இலையில் உணவு சாப்பிடும் வழக்கத்திற்கு திரும்பி வருகிறார்கள். இதனால் வாழை இலையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் வாழை இலை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். குழந்தைகளோடு பெற்றோர்கள் வாழை இலையில் வடை பாயசத்தோடு விருந்து சாப்பிடுகிற அந்த அலாதி தட்டில் பிளாஸ்டிக் பேப்பரில் வராது.

Leave a Reply

You must be logged in to post a comment.