சர்கார் படத்தில் கந்துவட்டி கொடுமையால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். யார் என்ன செய்தார்கள் என்று விஜய் கேட்பார். வாட்சப்பில் மெசேஜ் அனுப்பினார்கள் என்று அவரது கார் டிரைவர் கேலியாக சொல்லுவார். போராட வேண்டும் என்று படம் முழுவதும் பேசும் விஜய் போராடியவர்களை பற்றி மருந்துக்கு கூட ஒரு வார்த்தை எங்கும் எதுவும் சொல்லவில்லை.

படத்தில் ஆணிவேராக இரு காட்சிகள். ஒன்று தூத்துக்குடி போலீஸ் அராஜகம்.மற்றொன்றுகந்து வட்டி. இரு பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நின்று போராடியதை முருகதாஸ் தவிர மற்றவர்கள் அறிவார்கள். இன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் இங்கு கந்துவட்டி புகார் தெரிவிக்கவும் என்று எழுதப்பட்டதற்கு CPI(M) உள்ளிட்ட கட்சிகள் முன்னெடுத்த போராட்டமே காரணம்.

தீக்கிரையான பேச்சிமுத்துவை ஆஸ்பத்திரியில் சந்தித்தது, குற்றவாளிகளை உடனே கைது செய், கந்து வட்டி கொடுமையை தடுத்து நிறுத்து என மார்ச்சுவரி முன்பு இயக்கம் நடத்தியது, பாளையில் கண்ட ன ஆர்ப்பாட்டம் நடத்தியது, தோழர் பாலபாரதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை அனைத்து கட்சி சார்பில் முற்றுகையிட்டது, மாவட்டம் முழுவதும் இரண்டு நாள் பிரச்சாரம் செய்து தற்கொலை முடிவு எடுக்காதீர்கள் துணிந்து போராடுங்கள் நாங்கள் இருக்கிறோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தியது, கந்து வட்டியால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணைக்கு நடத்தியது தொடர் நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டது.

அந்த பொது விசாரணையின் போது தான் புளியங்குடி கிருஷணம்மாள் தன் இரு குழந்தைகளுடன் வந்தார். 2000 கடனுக்கு பல ஆயிரம் கொடுத்து, வட்டிக்காரன் கொடுமையால் கணவர் கேரளா சென்று சம்பாதிக்க, ஊருக்கு தெரியாமல் இரவு நேரத்தில் தன் பிள்ளைகளை பார்த்துச் சென்ற கொடுமையை கதறியபடி நம்மிடம் சொன்னார். புளியங்குடி கட்சி தோழர்கள் தலையிட்டு கடன் பத்திரத்தை கிழித்தெறிந்தனர். இப்படி எத்தனை எத்தனை பிரச்சனைகள். யாராவது போய் முருகதாசிடம் சொல்லுங்கள். அனுதினமும் போராடிக் கொண்டு இருக்கிறோம்.என்ன ஒரு காரியம் செய்யவில்லை. விஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை. ஒத்தக் கையால் நாடியில் குத்தி எவனும் செத்தும் போகவில்லை. அதனால் படத்துக்கு தடை விதிக்க நாம் சொல்லவில்லை.அது ஜனநாயகமுமல்ல. போராடியவர்களை குறிப்பிடாதது நேர்மையும் அல்ல.

Leave a Reply

You must be logged in to post a comment.