கிரிக்கெட் உலகின் “ரன் மெஷின்” என அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நவம்பர் 5-ஆம் தேதியன்று பிறந்த நாள் கொண்டாடினார்.கோலியின் பிறந்த நாளன்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துகளுடன் வாழ்த்துக்களைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்த வாழ்த்துப் பக்கத்தில் ரசிகர் ஒருவர், “விராட் கோலியின் பேட்டிங்கை விட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் பேட்டிங் தான் எனக்குப் பிடிக்கும்” என பதிவிட்டிருந்தார். இந்த கருத்து கோலிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக வீடியோ பதிவை கோலி வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில், “மற்ற நாடுகளை நேசிக்கும் ரசிகர் ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும்.என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை. அந்நிய நாட்டை விரும்பிக்கொண்டு இன்னும் இந்தியாவில் எதற்கு இருக்க வேண்டும்? எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” எனக் காட்டமாக கூறினார்.

கோலியின் வீடியோவை கண்ட நெட்டிசன்கள் தங்களது கேள்வி கணைகளால் பதிலடி கொடுத்துள்ளனர். அதில் “இந்தியரான நீங்கள் ஏன் வெளிநாட்டில் (இத்தாலி) போய் திருமணம் செய்தீர்கள்? வெளிநாட்டினர் கண்டுபிடித்த விளையாட்டை ஏன் விளையாடுகிறீர்கள்? கால்பந்து போன்ற விளையாட்டுகளில் வெளிநாட்டு அணியை ஏன் ஆதரிக்கிறீர்கள்?அந்நிய மொழியை ஏன் பேசுகிறீர்கள்? வெளிநாட்டு உடையை ஏன் அணிகிறீர்கள்? கடந்த 2008–ஆம் ஆண்டு உங்களுக்குப் பிடித்த வீரர் கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா) என்று சொன்னீர்கள்.அப்படி யென்றால் விராட் கோலியை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிடலாமா?” என்று வறுத்தெடுத்துள்ளனர்.
இந்நிலையில் கோலி கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிருப்தியடைந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர்

அனிருத் சவுத்ரி கூறுகையில், “கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது.அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன். அதோடு
விவியன் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஸ், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே மார்க் வாஹ், லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது கிரிக்கெட்.அவற்றை மதிக்கும் பண்பு வேண்டும்”என எச்சரித்துள்ளார். பெயர் கூற விருப்பப்படாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரசிகர்களை வெளிநாட்டுக்குச் செல்ல சொல்லும் கோலி, அதற்கான பின்விளைவுகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.இந்தக் கருத்தால் பூமா(PUMA) போன்ற அந்நிய நிறுவனங்கள் கோலியிடம் இனி ஒப்பந்தம் செய்ய விரும்பாது. கோலியின் கருத்தால் அவருடைய வருமானம் மட்டுமல்ல; இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானமும் வீழ்ச்சி அடையும். வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும்” என கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.