மதுரை:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ” தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் 2018-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி தான் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என்பதே நான்கு ஆண்டுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

எனவே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படக்கூடாது. மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும். மத்திய அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு வியாழனன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதில் மாற்றமிருக்காது எனத் தெரிவித்தார்.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பின், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும்? எவ்வளவு காலத்தில் நிறைவடையும் என்பது குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.