இரண்டாண்டுகளுக்கு முன்பு பணமதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நிமிடமே, இது ஒரு பேரழிவு அறிவிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்தது. அந்த எச்சரிக்கை அப்படியே உண்மையாகிப்போனது. பணமதிப்பு நீக்கத்தால் கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவேன் என்று படாடோபமாக அறிவித்தார் பிரதமர் மோடி. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வாயைத் திறக்க மறுக்கிறார். மவுனமாக இருக்கிறார். இந்தியாவின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் தனி ஒரு நபராக ஒழித்துக்கட்டிவிட்ட கள்ள மவுனம் அது.

இரண்டாண்டுக்கு முன்பு நடந்ததை மட்டுமல்ல, ஐந்தாண்டுக்கு முன்பு தான் சொன்னதையும் மிக எச்சரிக்கையுடன் மறந்துவிட்டார் பிரதமர் மோடி. அவருக்கு நினைவுப்படுத்த வேண்டியது நமது கடமையாகிவிட்டது. ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வோம் என்று மோடி கூறியதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவர் அப்படிச் சொல்லி ஐந்தாண்டுகள் ஓடிவிட்டது. எளிய மக்களுக்கு 15லட்சம் ரூபாய் கிடைப்பதற்கு பதிலாக வலுத்தவர்களுக்கும், பணம் கொழுத்தவர்களுக்கும் இந்திய வங்கிகளிலிருந்து 1.5லட்சம் கோடி ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு, அவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்குத்தான் உதவி செய்திருக்கிறார். வேறு எதைச் சாதித்துவிட்டார் நரேந்திர மோடி?

Leave a Reply

You must be logged in to post a comment.