திருப்பூர்:
சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து டிசம்பர் 10 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடத்தப்படும் “தேசம் காப்போம்” மாநாடு மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை இணைக்கும் முக்கிய மாநாடாகத் திகழும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வியாழனன்று தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து டிசம்பர் 10 ல் நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு மதசார்பற்ற இயக்கங்களை இணைக்கும் முக்கிய மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். தேசம் காக்கவும், ஜனநாயகம் காக்கவும், அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காக்கவும் இந்த முக்கிய மாநாடு நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டணத்தில் ராஜலட்சுமி என்ற சிறுமி கழுத்தைத் துண்டித்து கோரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது உறவினர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த பிரச்சனை குறித்து முதல்வரை நேரில் சந்தித்து அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோருவேன்.

இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தம் அவர்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். ராஜபக்சே பிரதமரானால் அது விசாரணைக்குத் தடையாக இருக்கும். தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருக்காது.

தமிழகத்தில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே இந்த தொகுதிகளில் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 20 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட விரும்பவில்லை. திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்புத் தருவோம்.

மதசார்பற்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும். யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட மோடி பிரதமராகக் கூடாது என்று முடிவு செய்ய வேண்டும். மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக செயல்பட்டால் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

சர்கார் படம் சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கருத்துரிமை, கருத்துச் சுதந்திரம் என்பது வரவேற்கக்கூடியதுதான். அவசியமானது. ஆனால் குறிப்பிட்ட கட்சி, தனி நபரை மையப்படுத்தி அவர்களை விமர்சிப்பது சரியல்ல. பொதுவானதாக விமர்சனம் இருக்க வேண்டும். ஆனால் திரைத்துறை வணிகர்கள் இதுபோன்ற விமர்சனத்தை வணிக நோக்கோடு காட்சிகளை வைக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் அதைப் பற்றி தணிக்கை வாரியம் (சென்சார்) தீர்மானிக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி காட்சிகளை நீக்கச் சொல்வது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று என திருமாவளவன் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.