நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. இதில் பலருக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறிகளோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தக்கலை அருகே திருவிதாங்கோடு புதுப்பள்ளியைச் சேர்ந்தவர் சக்ரியா (50). இவருக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து திருவிதாங்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு இவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கண்டறிந்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் புதனன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே குமரியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் தெரஷா பிரைட், கர்ப்பிணிப் பெண் சுகன்யா, தெங்கம்புதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை குமரி மாவட்டத்தில் 4 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: