இராமநாதபுரம்:
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை, தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி 8 நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு நிறுவன அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியில் தமிழக அரசின் உப்பு உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பெண்தொழிலாளர்கள் உட்பட 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தீபாவளி போனஸ் உள்ளிட்ட நிலுவைத் தொகையும் வழங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் நவம்பர் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் பேராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால் தமிழக அரசும் உப்பு நிறுவனமும் தொழிலாளர்களை அழைத்து பேசி தீர்வு காணாமல் இழுத்தடித்ததுடன் தீபாவளியும் முடிந்து விட்ட நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கஞ்சி காய்ச்சும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம், தீபாவளி அன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை 8 வது நாளாக போராட்டத்தின் தொடர்ச்சியாக உப்பு நிறுவனத்தை பூட்டு போடும் போராட்டம் மேற்கொள்ள வந்தனர். இதையொட்டி குவிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழை பெய்த போதும், குடைப் பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டம், போலீஸ் கெடுபிடி என பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், உப்பு நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தபடும் என அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, சங்கத்தின் தலைவர் கே.பச்சம்மாள், செயலாளர் குமரவடிவேல், தொமுச சார்பில் தலைவர் மலைக்கண்ணு, சாயல்குடி திமுக ஒன்றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்டவர்கள் பேசினர்கள்.(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.