===இ.எம். ஜோசப்===
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மீனவராக நடித்து வெளிவந்த “சகுந்தலை” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. அதில் கலைவாணரும் அவரது சக மீனவர் ஒருவரும் மீன் பிடிக்கச் செல்வார்கள். அவர்கள் பிடித்த ஒரே ஒரு மீனில் நியாயமான பங்கான பாதி மீனை கலைவாணர் தர மறுப்பார். மீனை எடுத்துக் கொண்டு ஓட முயன்ற சக மீனவரை அடிக்கத் தொடங்குவார். ஆனால், அவர் திருப்பி அடிக்க மாட்டார். மாறாக, தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டும், அழுது கொண்டும், “அடிப்பியோ, ஒங்கொப்பன் மவனே, சிங்கண்டா” என்பார். கலைவாணர் அடிக்க அடிக்க, மற்றவர் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டு அழுவார். இது அந்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி. சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்.

பொருளாதாரத் தடைகள்!
டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக வந்த பின்னர் ஏற்கனவே அமெரிக்காவின் முந்தைய நிர்வாகங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறுவது, ரத்து செய்வது வழக்கமாகி விட்டது. சுற்றுச் சூழல் குறித்த பாரீஸ் ஒப்பந்தம் முதல் பலவும் இதில் அடங்கும்.
அண்மையில், ஈரானுடன் 2015ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்து கொண்ட அணு ஒப்பந்தமும் அதில் இரையாகி உள்ளது. ஈரான் தரப்பில் மீறல் குறித்த எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படாத நிலையில், அதனை ரத்து செய்வதாக அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக அறிவித்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடையினையும் விதித்திருக்கிறது. எண்ணெய் வர்த்தகத்தில் யூரோவைப் பயன்படுத்தும் ஈரானை, பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்துவது, டிரம்பின் நோக்கமாகத் தெரிகிறது. டாலர் ஆதிக்கத்தினை நிலைநிறுத்தும் முயற்சியில் இதுவும் ஒரு உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஈரானிடம் வர்த்தக உறவு கொள்ளும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை என டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

சிரியாவிற்கு உதவியது, அமெரிக்கத் தேர்தல்களில் தலையிட்டது என்ற குற்றச்சாட்டுக்களின் பின்னணியில், 17 ரஷ்ய அதிகாரிகள், ரஷ்ய அரசுடைமை ஆயுதக் கம்பெனி, என பல காரணங்களைக் கூறி ரஷ்யா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

சீனாவுடன் வர்த்தகப் போர்!
உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு 17%. அமெரிக்காவின் பங்கு 14%. ஆனால் சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனையில் அமெரிக்க டாலரின் பங்கு 70%. சட்டப்பூர்வமாக டாலர் சர்வதேச ரிசர்வ் கரன்சி என்ற அந்தஸ்தினை 1971ஆம் ஆண்டிலேயே இழந்து விட்டது. எனினும் நடைமுறையில் அதனைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில், அமெரிக்கா மூர்க்கத்தனமான வன்முறையில் கூட இறங்குவது உண்டு. தனது பரிவர்த்தனை நாணயத்தை டாலரிலிருந்து யூரோவிற்கு மாற்றியதால் தானே, ஈராக் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானது?
சீனா தனது ஒன் பெல்ட் – ஒன் ரோடு (One Belt – One Road) திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து நாடுகளின் உள்நாட்டுக் கரன்சிகளையும் வர்த்தகப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தி, அமெரிக்க டாலரை ஓரங்கட்டி விட்டது. இது சீனாவிற்கு எதிராக, அமெரிக்காவின் கோபத்தினை அதிகப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில், செயற்கை அறிவூட்டப்பட்ட எந்திரத்துறை (Artificial Intelligence -AI) 2025ல் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் என கணிக்கப்படுகிறது. உயர் தொழில்நுட்பத்தில், குறிப்பாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பேராசையினை இது தவிடு பொடி ஆக்கியுள்ளது. அதே போன்று தொழில் துறைப் போட்டியிலும், சீன நாட்டின் பெரிய கம்பெனிகள் பல, அமெரிக்கக் கம்பெனிகளுடன் சர்வதேச அளவில் கடுமையாக மோதும் நிலையில் அமெரிக்காவின் கோபம் அதிகமாகியிருக்கிறது. சீனாவுடன் மட்டும் அல்லாது, அதன் வர்த்தகக் கூட்டாளிகளையும் இந்த வர்த்தகப் போர் பாதிக்கும் போது, சீனப் பொருளாதாரம் சிதையும். அதையடுத்து, சீனா தன்னிடம் சரணடையும் என்பது தான் அமெரிக்காவின் கணக்கு.

பூகோள – அரசியல் வியூகம்
நவம்பர் 5 முதல் அமலாகவிருக்கிற பொருளாதாரத் தடைக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளுள் சீனா, இந்தியா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென் கொரியா, தைவான், துருக்கி ஆகிய எட்டு நாடுகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் போம்பியோ, நவம்பர் 5 அன்று அறிவித்திருக்கிறார்.
டாலர், உயர் தொழில்நுட்பம் தவிர, தனது அரசியல் அதன் பின்னணியில் இருக்கும் ராணுவ மேலாண்மையினை வலுப்படுத்துவதும் அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கும். உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார சக்தியான சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதற்கான பூகோள அரசியல் தேவைகளும் பொருளாதாரத் தாக்குதல்களின் பின்னணியில் இடம் பெற்றிருக்கின்றன.

பொருளாதாரத் தடைக்கு ஆளாகவிருக்கும் நாடுகளில் அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளிகளான ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளும் இடம் பெற்றுள்ளன. சர்வதேச அரசியல் – ராணுவத் தேவைகளின் நிர்ப்பந்தம் காரணமாக, ஈரான் எண்ணெய் வாங்குவதில், தனது நண்பர்களுக்கு தடையிலிருந்து சற்று நிவாரணம் அளிக்கும் தேவையும் அமெரிக்காவிற்கு உண்டு. அந்நிலையில், சீனாவிற்கு மட்டும் வேறு காரணம் கூறி அதனைத் தனிமைப்படுத்துவது சிரமம் என்பதால், விலக்கினை சீனாவிற்குக் கூட விரிவுபடுத்த வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்படலாம் என சில நாட்களுக்கு முன்பு ஊடகங்கள் வெளியிட்ட ஊகம் சரி எனத் தெரிகிறது.

நாடுகளின் இறையாண்மை
அமெரிக்காவின் இராணுவக் கூட்டாளி நாடுகள் தங்கள் இறையாண்மை குறித்த விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல், தங்களது பொருளாதார நலன்களின் அடிப்படையில் செயல்படுகின்றன என்பது இங்கு கவனிக்கத் தக்கது. 2012ஆம் ஆண்டைப் போல் அல்லாமல், அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகள், அமெரிக்காவின் கடுமையான எதிரியான சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகின்ற காலம் இது. பிரதானமாக, ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவும் வகையில், “சிறப்பு பரிவர்த்தனை ஏற்பாடு” (Special Payments Mechanism) ஒன்றினையும் அவர்கள் செய்திருக்கிறார்கள். அணு ஒப்பந்தத்திலிருந்து ஈரானும் வெளியேறி விடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

ஈரானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்துவதில் அமெரிக்கா வெற்றி பெறக்கூடும். ஆனால், அந்த வளர்ச்சிப் போக்கில், அரசியல் ரீதியாக அமெரிக்கா தனிமைப்படுவதும் நடக்கிறது. “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு முறையினை” (Rules Based International Order) அமெரிக்கா துச்சமாக மதிக்கிறது. ஆனால், அதன் கூட்டாளி நாடுகள் அதனை இப்போது ஏற்பதில்லை. அண்மையில் பாரீசில் நடைபெற்ற பல்வேறு நாடுகளின் நிதிச் செயல்பாட்டுப் பணிக்குழு (Financial Action Task Force) கூட்டத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால், குற்றச்சாட்டு புறந்தள்ளப்பட்டது. அமெரிக்கா இதில் தனிமைப்பட்டது.

கடந்த காலங்களில், ஜப்பானுக்கும், சீனாவிற்குமான உறவு மிக மோசமானது எனினும், தங்களது பொருளாதார உறவுகளை இரு நாடுகளும் பலப்படுத்தி வருகின்றன. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் 2017 முதல் ஜப்பானும், ஒரு பங்காளியாக மாறி விட்டது. இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு 300 பில்லியன் டாலருக்கும் சற்று அதிகம். மலேசியாவிலிருந்து ஜப்பான் வரை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை எதிரும் புதிருமான பல நாடுகள் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் பங்காளிகளாக இணைந்திருக்கின்றன. இந்தியா மட்டும் இதில் தனிமைப்பட்டு நிற்கிறது. ஜப்பானும் இந்தியாவும், சீனாவுடன் ஒரு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்க முடியும் என, இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தியா வந்த ஜப்பான் மிஷன் துணைத் தலைவர் ஹிடேக்கி அசாரி தெரிவித்துள்ள கருத்து குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நிலை…
பா.ஜ.க (வாஜ்பாயி) தலைமையிலான தே.ஜ.கூ அரசு 2002ஆம் ஆண்டில், அமெரிக்காவுடன் ராணுவத் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்தது. 2016ஆம் ஆண்டில் தளவாட விரிவாக்கம் குறித்தும், 2018ஆம் ஆண்டில் தகவல் மற்றும் ஒத்திசைவு குறித்தும் இரண்டு ஒப்பந்தங்களை மோடி அரசு செய்து கொண்டது. இவற்றின் மூலம் அமெரிக்கா இந்தியாவின் முக்கிய ஆயுத சப்ளையராக மாறியது. ரஷ்ய தளவாடங்கள் புறந்தள்ளப்பட்டன. இவ்வாறு, சீனாவிற்கு எதிரான ராணுவ நோக்கங்களில், இந்தியாவை தனது இளைய பங்காளியாக எளிதில் மாற்றி விட்டது. தனது ஆயுதங்களை தனது எதிரிகளுக்கு ஆதரவாக பயன்படுத்தக் கூடாது என்று ரஷ்யா நிபந்தனை விதிப்பதில்லை. ஆனால், அமெரிக்காவின் நிபந்தனை அதற்கு நேர் எதிரானது. இது இந்தியாவைக் கட்டுப்படுத்துகிறது. அமெரிக்கா எந்த நாட்டிற்கு எதிராகவும் போர் தொடுத்தால், அமெரிக்காவிற்கு ஆதரவாக, அதில் ஏதாவது ஒரு வகையில் இந்தியா களம் இறக்கி விடப்படும்.

அமெரிக்காவை நம்பி இந்தியா ஆப்கானிஸ்தானில் சில முதலீடுகளைச் செய்திருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தானை விட்டு, அமெரிக்கா எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்ற இன்றைய நிலையில், இந்திய முதலீடுகள் என்னவாகும்?

தனது தேவைக்காக, வட கொரியாவிலுள்ள தூதரகத்தை மூட வேண்டும் என இந்தியாவை நிர்பந்தித்த அமெரிக்கா, வட கொரியாவுடன் போகிற போக்கில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட போது இந்தியாவை கலந்து ஆலோசித்ததா, இல்லையே?

இவற்றை எல்லாம் தொகுத்துச் சொல்வதென்றால், அமெரிக்காவிற்கு ஒரு நாடு பங்காளியாக ஆக வேண்டும் எனில், அந்நாடு அமெரிக்காவின் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்குள் முற்றிலுமாகக் கரைந்து விட வேண்டும். சரி, இதற்கெல்லாம் பதிலாக இந்தியாவிற்கு என்ன கிடைத்தது? ஆசியா – பசிபிக் என்பதை இந்தோ – பசிபிக் என்று பெயர் மாற்றி இந்தியாவை அமெரிக்கா கௌரவித்தது. இந்தக் கௌரவத்தை விட நமக்கு வேறென்ன வேண்டும்?

சந்திக்கவுள்ள நெருக்கடிகள்
இராக்கிற்கும் சவூதி அரேபியாவிற்கும் அடுத்து ஈரான் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் மூன்றாவது முக்கிய நாடாகும். எண்ணெய் விலையில், ஒரு பீப்பாய்க்கு 6 டாலர் வரையிலான சலுகையினையும் ஈரான் இந்தியாவிற்கு வழங்கி வருகிறது. தவிர, டாலருக்குப் பதிலாக விலையில் 45 சதவீதத்தினை இந்திய ரூபாயிலும் மீதியை யூரோவிலும் ஏற்றுக் கொள்ள, ஈரான் தயாராகவுள்ளது. முந்தைய பொருளாதாரத் தடைக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்னும் காலாவதி ஆகவில்லை. இதன் மூலம் இந்தியாவிற்கு 8.5 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி மிச்சமாகிறது. அந்த ரூபாயைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்கள், எந்திரங்களை இறக்குமதி செய்யவும் ஈரான் தயாராகவுள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதிக்கு உதவும் அம்சம். இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு மிகவும் கீழ் இறங்கியுள்ள இந்த நேரத்தில், இந்தச் சலுகையினை பயன்படுத்த இந்தியா அனுமதிக்கப்படுமா எனவும் தெரியவில்லை.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான சென்னை பெட்ரோலியம் எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனியில், ஈரானுக்குச் சொந்தமான நாப்டிரான் இண்டர் டிரேட் 15.4 சதவீதப் பங்குகளை வைத்திருக்கிறது. பொருளாதாரத் தடையின் பின்னணியில், ஈரான் கச்சா எண்ணெயினை இந்தியாவில் சுத்திகரிக்க முடியுமா எனத் தெரியவில்லை.

அதே போன்று, ஈரானிய கடற்கரையில் சாப்பார் என்ற துறைமுகத்தைக் கட்டுவதில் இந்தியா முதலீடு செய்திருக்கிறது. அது என்னவாகும்? இவை எல்லாம் இந்தப் பொருளாதாரத் தடையால் இந்தியா சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள். மொத்தத் தடைகளும் இவ்வளவு தானா, அல்லது இன்னும் வருமா என்பதும் கேள்விக்குறியே.

இந்தியா எதிர் கொள்ளுமா?
“இந்தியா தான் எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கின்றனர். நாங்கள் ஒன்றும் அவர்களுக்கு அழைப்பு விடவில்லை.” இது இந்தியாவின் பலவீனம் குறித்து, சென்ற மாதத் தொடக்கத்தில், டிரம்ப் செய்த கிண்டல்.

இதைத் தொடர்ந்து, 2019 இந்தியக் குடியரசு தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்த டிரம்ப், அண்மையில் அது இயலாது என அறிவித்து மோடியை நெளிய விட்டிருக்கிறார். இது தான் இந்தியா என்ற இளைய பங்காளிக்கு அமெரிக்கா அளிக்கும் மரியாதை.

இந்தச் சூழலுக்குட்பட்டு, அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில், ஈரான் போன்று யார் எங்களுக்கு சலுகை தருவார்கள் என்று கேட்டும், ரஷ்ய ஆயுதங்களை அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம் என்று மீண்டும் உறுதி அளித்தும் அமெரிக்காவிடம் இந்தியா கெஞ்சிக் கூத்தாடியிருக்கிறது என ஊடகங்களில் செய்தி கசிந்திருக்கிறது.

அமெரிக்காவின் பிற கூட்டாளிகள் தங்களது நாடுகளின் இறையாண்மை குறித்த பிரச்சனைகளில் எடுப்பது போன்ற சுதந்திரமான நிலைப்பாட்டினை இந்தியா எடுக்குமா?
ஆனாலும், இறையாண்மை என்பது அண்மைக்காலத்தில் இந்தியாவின் மந்திரச் சொல்லாக மாறி வருகிறது. பிரதமரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்த வார்த்தையினை மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். “எங்களது இறையாண்மை சவாலுக்கு உள்ளாகும் எனில், நாங்கள் திருப்பித் தாக்குவோம்.” இது பிரதமர் மோடியின் அண்மைய அதிரடிப் பேச்சு.

அப்படியானால், இந்தியா திருப்பித் தாக்கப் போகிறதா? இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ள, தயவு செய்து இக்கட்டுரையின் முதல் பத்தியினை மீண்டும் படிக்கவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.