ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பல்லாண்டு காலமாக போடப்படாத சாலை திடீரென அமைச்சர் வருகைக்காக தற்காலிமாக மண்ணைக் கொட்டி சீரமைக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா கடம்பூரை அடுத்த சின்னசாலட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கிருந்து ஆற்றை கடந்துதான் மற்ற பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். ஆகவே, சின்னசாலட்டி கடை பகுதியில் இருந்து ஆற்றை கடந்து குடியிருப்புகள் உள்ள பகுதி வரை தார்சாலை மற்றும் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இன்று வரை அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அதிமுகவின் 47 ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம் வியாழனன்று சின்னசாலட்டி நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சின்னசாலட்டியிலுள்ள சாலையில் மண்ணை கொட்டி சமன் செய்யும் பணியில் அரசு நிர்வாகம் அவசர அவசரமாக ஈடுபட்டுள்ளது. இச்செயல் அப்பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 70 வருடத்திற்கு மேலாக இந்த ஊருக்கு சாலை வசதி கிடையாது. ஆற்றில் காட்டாற்று வெள்ளம் வந்தால் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஊரில் உள்ள யாரும் ஊரை விட்டு வெளியே செல்ல முடியாது. ஆகவே, இந்த வழியாக தார்சாலை மற்றும் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், அமைச்சர்களின் வாகனங்கள் செல்லுவதற்காக தற்போது மண்ணை கொட்டி சாலையை தற்காலிமாக சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சாதாரண மழை வந்தால் கூட கொட்டப்பட்ட மண் கரைந்துவிடும். எனவே, மண்ணை கொட்டி சமன்படுத்துவதை விட்டு விட்டு தார்சாலை மற்றும் பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.