கடலூர்: அரசுப் பேருந்தின் பின்புறம் கார் மோதியதில் அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசுப் பேருந்தின் பின்புறத்தில், கார் மோதி விபத்துக்குள்ளானதில், அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். வேப்பூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி நோக்கி அரசுப் பேருந்து சென்றுள்ளது. அதே சாலையில், கரூரிலிருந்து சென்னை நோக்கி, அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். ஐவதுகுடி என்ற இடத்தில், அரசுப் பேருந்து திடீரென இடது புறமாக திரும்பியுள்ளது.

இண்டிகேட்டரை இயக்காமலும், சமிஞ்சை செய்யாமலும் அரசுப் பேருந்தை, ஓட்டுநர் திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது பின்புறம் அதிவேகமாக வந்த லோகநாதனின் கார், அரசுப் பேருந்தின் மீது மோதியதில் லோகநாதன், அவரது மகன்கள் சிவராமன், ரித்தீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த லோகநாதனின் மனைவி ஷாலினி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே காரில் பயணித்த லோகநாதனின் 2 வயது மகன் ரக்சன் உயிர் தப்பினான். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.