புதுதில்லி, நவ. 7-

ஜார்கண்ட மாநிலத்தில் லடேகர் மாவட்டத்தில் மதவெறிக் கும்பலால் இம்டியாஸ் கான் என்னும் 12 வயது முஸ்லீம் சிறுவனும், அவனுடைய மாமா எம். அன்சாரியும் கொல்லப்பட்ட வழக்கில் பாதிப்புக்குள்ளானவர்களின் குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் வழங்காததற்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம், லடேகார் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டில் இந்துத்துவா மதவெறிக் கும்பலால் இம்டியாஸ் கான் என்னும் 12 வயது முஸ்லீம் சிறுவனும், எம்.  அன்சாரி என்கிற அவனுடைய மாமாவும் கொல்லப்பட்டார்கள். அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருக்கு பிருந்தா காரத் கடிதம் எழுதியிருந்தார். எனினும் அவ்வாறு எவ்வித இழப்பீடும் வழங்காது, தேசிய மனித உரிமைகள் ஆணையம், பிருந்தா காரத் அனுப்பியிருந்த கடிதத்தை தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு மதவெறியர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் மனித உரிமைகளைப் பாதுகாத்திட, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தான் மேற்கொள்ள வேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டது என்றும், அவர்களுக்கு உரிய இழப்பீட்டைத் பெற்றுத்தர வேண்டும் என்றும் பிருந்தா காரத் கோரியிருக்கிறார்.

இது தொடர்பாக பிருந்தா காரத், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“2016இல் நான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு தாங்கள் 2018 அக்டோபர் 27 அன்று பதிலளித்திருக்கிறீர்கள். மேற்படி கடிதத்தின் மூலமாக, மதவெறியர்களால் கொல்லப்பட்ட இம்டியாஸ் கான் மற்றும் எம். அன்சாரி ஆகியோரின் குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படாமல், நான் அனுப்பியிருந்த கடிதத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்துக்கொண்டிருப்பதைக் கண்ணுறும்போது மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாகிறேன்.

முன்பு, ஜார்கண்ட் மாநில அரசாங்கத்தின் சார்பாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தங்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமரியாதையாகக் கருதி, அக்குடும்பத்தினர் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

மதவெறியர்களால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீட்டைப் பெற்றுத்தருவது என்பது நிச்சயமாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கடமையாகும்.  இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜார்கண்ட் அரசாங்கம் அளிக்க முன்வந்த ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது மிகவும் அற்பம் என்றும், அதனை மாநில அரசு உயர்த்தித்தர வேண்டும் என்றும்  தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசை வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ இல்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

இரண்டாவதாக, தாங்கள் தங்களுடைய கடிதத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து நான்கு வார காலத்திற்குள் ஆஜராகுமாறு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் ஆஜராக வில்லை என்றும், எனவே அவர்கள் தொடர்பான வழக்கு முடித்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. நான் அனுப்பியிருந்த கடிதத்தின்மீது ஆணையம் தலையிடுவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ள நிலையில், தாங்கள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்தார் தங்கள் முன் நான்கு வார காலத்திற்குள் ஆஜராகவில்லை என்பதற்காக, வழக்கைத் தாங்கள் முடித்துக் கொண்டிருப்பது நியாயமோ, நேர்மையோ கிடையாது. தாங்கள் அனுப்பிய கடிதம் அவர்களுக்குப் போய்ச் சேராமல் இருப்பதற்குப் போதுமான காரணங்கள் உண்டு. அவர்கள் பிழைப்பு தேடி வேறெங்காவது புலம்பெயர்ந்து சென்றிருக்கலாம். அதன் காரணமாக, தாங்கள் நிர்ணயித்த காலத்திற்குள் தங்கள் முன் ஆஜராக முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர்கள் ஆஜராகததாலேயே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை அவர்கள் மதித்திடவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது.

எனவே, தாங்கள் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மதவெறியர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் போதுமான அளவிற்கு,  இழப்பீட்டைப் பெற்றுத்தந்து, அதன் மூலம் அவர்களுக்கு நீதி கிடைத்திடுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் மீளவும் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு பிருந்தா காரத் கோரியுள்ளார்.

(ந.நி.

Leave A Reply

%d bloggers like this: