===கே.ஜி.பாஸ்கரன்===
சோசலிசத்திற்கான பயணத்தில் நொடிப்பொழுது கண்ணயர்ந்தாலும் பாசிசம் என்னும் கொடுந்தண்டனை நமக்கு வந்து சேரும் என்றார் பிரெஞ்சு வரலாற்றாசிரியரும் சோசலிஸ்டுமான டேனியல் தெரின். இதன் பொருள், பாசிசம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பு. எப்போதெல்லாம் சமூக, ஜனநாயக சக்திகள் பலவீனமடைகின்றனவோ அல்லது பின்தங்குகின்றனவோ அப்போதெல்லாம் பாசிசம் வெறியோடு தலைதூக்கும். முதலாளித்துவம் அடுத்த கட்டமான சோசலிசத்திற்குதான் இட்டுச்செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. காட்டுமிராண்டிதனத்திற்கும் இட்டுச்செல்லலாம் என்ற மார்க்சின் புகழ்மிக்க போதனையைத் தான் தெரின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தகு எதேச்சதிகார, பாசிச நடவடிக்கைகளை நாடு முழுவதும் இந்துத்துவா சக்திகள் முன்கொண்டு செல்கிறது. தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்த இடைவிடாமல் பற்பல காரியங்களையும் முன்னெடுக்கிறது. 1996ல் 20 சத வாக்குகளைப் பெற்று கூட்டணி அமைத்து பிஜேபி ஆட்சியை பிடித்த போதிலும், அது நீடித்து நிலைக்க முடியவில்லை. தனது சொந்த பலத்தைக் கொண்டே ஆட்சிக்கு வரும் வகையில் ஒரு நீண்ட கால திட்டத்தை உருவாக்கியது. 2014ல் தனது வாக்கு பலத்தை 31 சதமாக உயர்த்திக் கொண்டது.

பிஜேபிக்கு மக்கள் ஆதரவு உயரக் காரணமாக இருந்தது வகுப்புவாத அடிப்படையிலான வாக்குகள் மட்டுமல்ல, மத அடிப்படையிலான வாக்குகளும் காரணமாகும். மத உணர்வை அதிகரிப்பது மத அடிப்படையிலான ஆதரவை திரட்டுவதற்கு ஏற்ற வழி என பிஜேபி கருதுகிறது. அப்பணியை நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் செய்கிறது என வரலாற்றாய்வாளர் கே.என்.பணிக்கர் கூறுகிறார். ராமர் கோவில் பிரச்சனையை மையமாக கொண்டு மத விழாக்கள் மற்றும் வகுப்புவாத நடவடிக்கைகளின் மூலம் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் செல்வாக்கு பெற்றது. ஜன சங்க தலைவர் பால்ராஜ் மாதோக், “தேசிய நீரோட்டம் என்பது இந்து மத விழாக்கள்” என குறிப்பிடுகிறார் அவரது இந்தியமயமாக்கல் நூலில்.

இத்தகு நடவடிக்கை தான் நெல்லையில் நடைபெற்ற மகாபுஷ்கர். குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததை தொடர்ந்து அக்டோபர் 11 முதல் 23 வரை தாமிரபரணியில் மகாபுஷ்கர் நடைபெற்றது. விருச்சிக ராசிக்குரியது தாமிரபரணி நதி எனவும், 12 ராசிக்கும் நாடெங்கும் 12 நதிகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கர், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாபுஷ்கர் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சாரமும், ஏற்பாடுகளும் நடந்தன.

இது தான் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு. நமது மற்றும் அடுத்த மூன்று தலைமுறைகளுக்கும் காணக்கிடைக்காத ஒரு மாபெரும் வாய்ப்பு இது. மீண்டும் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்குமா, இந்த ஜென்மாவில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் அல்லவா இது. எனவே உங்கள் மகாபுஷ்கர பயணத்தை இன்றே உறுதி செய்து கொள்ளுங்கள் என்று பாரம்பரியமிக்க நாளிதழ் சிறப்பு மலரின் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு திரட்டலை மேற்கொண்டது. நெல்லையில் நடந்த கூட்டத்தில் பிஜேபி தலைவர் இல.கணேசன், “புனித பயணங்கள் தொடரும் வரை பாரத தாய் உயிரோட்டமாக இருப்பாள். குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்தல் என்பது இந்த தேசத்தில் இருக்கிறது” என குறிப்பிட்டார். பிஜேபி பேசி வருகிற கலாச்சார தேசியத்தை தான் அவர் இவ்வாறு குறுப்பிடுகிறார் என்பதை அறிய முடியும்.

இந்த விழா ஆன்மீக உணர்வை வளர்த்துள்ளது. அடுத்து தமிழகத்தில் ஆன்மீக அரசியலுக்கு மட்டுமே இடமுண்டு என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் குறிப்பிட்டது இந்த விழாவின் நோக்கத்தை தெளிவாகவே விளக்குகிறது. தாமிரபரணி தமிழின் ஊற்று மட்டுமல்ல, ஆன்மீகத்தின் ஊற்று என்று தாமிரபரணி குறித்த நூலை வெளியிட்ட சுதாசேஷய்யன் கூறினார். இதுவரை தாமிரபரணி என சொல்லி வந்ததை தாமிரவருணி என மகாபுஷ்கரத்தையொட்டி பெயரையே மாற்றி விட்டனர். ஒரு நாளிதழில் மிக கவனத்தோடு தாமிரவருணி என்றே எழுதி வந்தனர். வருணி என்றாள் வருணனின் மகள். வருணனே நீருக்கு, நதிக்கு தலைவன் என்ற புராண கதையோடு தாமிரபரணியை இணைக்கும் காரியமும் நடந்தது.

தாப்ரபரணே, தவீபராவணீ, தாம்மபன்னி, பொருநை, தாம்பிரபரணி என்றே அதன் பெயர் மாறிவந்துள்ளது. வருணி என எங்கும் இல்லை. புனைவு வரலாறு கட்டமைக்கப்படுவதை இதில் காண முடிகிறது. ஆளுநர் துவங்கி சினிமா நடிகர்கள் வரை துவக்க நாட்களில் வந்து விளம்பரத்தை உருவாக்கி, தசரா விடுமுறை நாட்களில் சுற்றுலா போன்று பெரும் கூட்டம் வந்து சேர்ந்தது. 20 லட்சத்திற்கும் அதிகமாக வந்து சென்றிருக்க கூடும். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்தவர் உள்ளிட்டு 70 லட்சம் என ஒரு பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

தூத்துக்குடி முறப்பநாட்டில் மட்டும் 6,19,915 பேர் வந்து குளித்து சென்றதாக அந்த மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 143 தீர்த்த கட்டங்களில், 18 தீர்த்த கட்டங்களில் வேள்வி, யாகம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதில் ஒரு தீர்த்தகட்டமே முறப்பநாடு. கங்கை வரை சென்று வந்த தாமிரபரணி நதி ரதத்தை புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். தலித் சக்தியின் எழுச்சியானது இறுதியில் இந்துத்துவம் என்ற பேரமைப்பில் இணைந்து முழுசமுதாயமும் நலம் பெறும் என இந்துத்துவா சிந்தனையாளர் கோவிந்தச்சார்யா கூறியது இங்கு நினைவு கூறப்பட வேண்டிய ஒன்றாகும்.

துறவியர் மாநாட்டை ஆளுநரே துவக்கி வைத்தார். ஐயப்ப பக்தர் மாநாடு, முருக பக்தர்கள் மாநாடு, இந்து சமய இயக்கங்கள் ஒருங்கிணைப்பு மாநாடு, ஈஷா யோகா மையத்தின் ஆரத்தி வழிபாடு என மாநாடுகளும், சமய சொற்பொழிவுகளும், ஹோம வழிபாடுகளும், அன்னதானங்களும் அன்றாட நிகழ்வுகளாகின. சாரதா கல்லூரியில் நடந்த சொற்பொழிவில் கலந்து கொண்ட பெண்களுக்கு இலவச பரிசுகள் வழங்கப்பட்டன.

மகாபுஷ்கர் நினைவாக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் விடவேண்டும், கங்கை நீரைப் போல தாமிரபரணி நீரையும் அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு பின்னால் இந்துத்துவா அமைப்புகள் உள்ளன. ஆர்எஸ்எஸ் அமைப்பு அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் படித்துறைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. நம் நாட்டில் தான் நதியை தாயாக பூஜித்து வருகிறோம். “ஆன்மீக தமிழ்ப் பண்பாடு” நாகரிகத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு 229 கோடி ஒதுக்கியுள்ளது என தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் குளித்த கையோடு பேட்டியொன்றை கொடுத்துள்ளார்.

நதி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரப்பப்படுகிறது. நீர் நிலைகளை, நீர் வளத்தை பாதுகாக்க தொலைநோக்கான, அறிவியல்பூர்வமான திட்டங்கள் தேவை. அது தமிழக அரசிடம் இல்லை. தமிழகத்தில் 20 லட்சம் கிணறுகளில் 53 சதம் கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டன. 1960களில் தமிழக மொத்த நிலப்பரப்பில் 23 சதமாக இருந்த வனப்பரப்பு 16 சதமாக குறைந்து விட்டது. தமிழ்நாடு நீர் தேக்க வளர்ச்சி ஆணையம் உருவாக்கிய 20 ஆயிரம் குளம், குட்டைகள் பராமரிப்பு இன்றி உள்ளது. மணல் கொள்ளை தடுக்கப்படவில்லை. அந்நிய குளிர்பான கம்பெனிகளுக்கு சலுகை விலையில் தாமிரபரணி விற்கப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வும், நீர் நிலைகள் குறித்த அறிவியல்பூர்வமான திட்டங்களுமே உண்மையான நதி பாதுகாப்பாகும்.

வகுப்புவாத குரோதத்தையும் வெறுப்புணர்வையும் தூண்டிவிடுவதால் கிடைக்க்கூடிய ஆதாயத்தை விட, மக்களின் பொதுவான மத நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு அரசியல் நடத்துவதில் கூடுதல் ஆதாயம் கிடைக்கிறது. இன்றைய வகுப்புவாதம் தன்னை மேலும் மேலும் மத நம்பிக்கையுடன் இணைந்து இனம் காட்டிக்கொள்கிறது. மத நலன்களை காப்பதாக கூறிக்கொண்டு மாரீச வேடம் போட்டுத் தனது அரசியலை நடத்துகிறது. சமுதாய அளவிலான மதச்சார்பற்ற உணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு மதச்சார்பற்ற அரசியல் திட்டத்தினை உருவாக்கி செயல்பட வேண்டியதின் அவசியத்தை அது மேலும் மேலும் வற்புறுத்துகிறது.

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) நெல்லை மாவட்டச் செயலாளர்

Leave a Reply

You must be logged in to post a comment.