தருமபுரி: தருமபுரி அருகே வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் இட்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகவுண்டர். இவருடைய மனைவி ராமாயி (60). இவர் சொந்த வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சந்திராபுரம் – இட்லப்பட்டி சாலையை கடக்கும்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் ராமாயி மீது வேகமாக மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராமாயி சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் மேல் சிகிச்சைக்காக ஊத்தங்கரைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தருமபுரி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், பாப்பிரெட்பட்டி வட்டம், கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் சிவப்பிரகாசம் (21). இவர் தனது நண்பரான விஜயுடன் (21)இருசக்கர வாகனத்தில் வாணியாறு டேம் அருகே உள்ள பாலத்துக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதியது. இதில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த விஜய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாப்பிரெட்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்லம்பள்ளி வட்டம், பூட்டுக்காரன் தொப்பு பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (54), இவர் தனது மனைவி சாந்தாவுடன் தொப்பூர் அருகே உள்ள ஜருகு கருப்பநாய்க்கன்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது வெள்ளக்கல் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சாந்தா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரி அருகே கொமத்தான்பட்டியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் பொன்னரசு (32). இவர் இருசக்கர வாகனத்தில் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கொமத்தான்பட்டி அருகே வந்தபோது எதிர்பாராத விதமான சாலையோர தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக பொன்னரசு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: