கோவை : டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் மேலும் நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் இக்காய்ச்சலினால் அனுமதிக்கப்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது 14 வயது மகள் சுபஸ்ரீ பன்றிக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதனன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த கதிர்வேல் (32) என்பவர் செவ்வாயன்று இரவு உயிரிழந்தார். மேலும், டெங்கு காய்ச்சலுக்குசிகிச்சை பெற்று வந்த மேட்டுபாளையத்தை சேர்ந்த போத்திராஜ் (57) மற்றும் சேலத்தை சேர்ந்த ராஜ்குமார் (39) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவ்வாறு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக கோவை அரசுஅரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் அடுத்
தடுத்து உயிரிழந்துள்ளனர்.

மேலும்,கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை உறுதி செய்யப்படாத நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, வைரஸ் காய்ச்சல் காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு,சேலம் போன்ற பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்ததொடர் உயிரிழப்புகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.