திருப்பூர்: திருப்பூர் அருகே கோதபாளையம் எனும் ஊரில் சங்ககாலக் கட்டுமானம் இருந்ததற்கான தடயம் தென்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் தொல்லியல் துறையினர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டால் முழு விபரத்தை அறிய முடியும் என்று வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறுகின்றனர். அவிநாசி மங்கலம் சாலையில் இருந்து தெக்கலூர் செல்லும் சாலையில் உள்ள வஞ்சிபாளையத்திற்கு 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் கோதபாளையம். இவ்வூருக்கு அருகில் வண்ணாத்தங்கரையின் மேல்கரையில் குறுக்குப்பாளையம் எனும் ஊர் உள்ளது. இங்கு நடராசன் என்பவருக்கு உரிய வாலி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மண்ணைத் தோண்டி எடுக்கும்போது ஓர் செங்கல் கட்டுமானம் தெரியவந்தது.

இதைப்பற்றி வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து புலவர் வே.சுந்தரகணேசன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அங்கு சென்று மேற்பரப்பு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து புலவர் வே.சுந்தரகணேசன் கூறியதாவது: கோதபாளையம் சேரர் காலத்தில் தோன்றிய ஊர் ஆகும். இங்கு காணப்படுகிற கட்டுமானத்தில் செங்கல் 41 செ.மீட்டர் நீளமும், 26 செ.மீட்டர் அகலமும், 8 செ.மீட்டர் உயரமும் கொண்டது. இந்த செங்கற்கல்லை சங்க கால ஊர்கள் என அறியப்பட்ட பல்வேறு இடங்களில் கிடைத்த செங்கற்களை வைத்து பார்க்கும்போது இவை சங்க காலத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம். தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் பூங்குன்றனும் இதை ஆமோதிக்கிறார். மேலும், இப்பகுதியில் செய்த மேற்பரப்பு ஆய்வில் இரும்பை உருக்கியத் தடயமும், பண்டைய கால மக்களின்மண்பானை ஓட்டுச் சில்லும் பெருமளவில் கிடைக்கின்றன.

அது மட்டுமின்றி கோதபாளையம் பழனிசாமியின் ஊர்வழித் தோட்டத்தில் கற்பதிக்கையும் காணப்படுகின்றன. இதன் மூலம் இவ்வூர் சங்க கால ஊராக இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு என்பது தெளிவாகிறது என்று கூறினார். இதுகுறித்து அரசின் தொல்லியல் துறைகள ஆய்வு செய்தால் கொங்கு நாட்டின் சங்க காலக் கட்டுமானத்தைக் கண்டறியலாம் என்றும் புலவர் வே.சுந்தரகணேசன் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.