தருமபுரி: வாணியாறு அணையின் இடதுபுற பாசன கால்வாய் நீட்டிப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை அடுத்த முள்ளிக்காட்டில் வாணியாறு அணை உள்ளது. தற்போது, வாணியாறு அணையின் இடதுபுற பாசனக் கால்வாய் பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை உள்ளது. இதை, 16 கிலோ மீட்டர் தூரமுள்ள மூக்கனூர்பட்டி ஏரி வரை நீட்டிக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாணியாறு அணையின் இடதுபுற பாசன கால்வாய் நீட்டிக்கப்பட்டால் 16 ஏரிகள் நிரம்புவதுடன், குருபரஹள்ளி, வகுத்துப்பட்டி, ராமியம்பட்டி உள்ளிட்ட 10 பஞ்சாயத்துகளில் குடிநீர் ஆதாரமும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மேலும், 5,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 30 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயனடையும்.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வாணியாறு அணையின் இடதுபுற கால்வாய் நீட்டிப்பு குறித்த திட்ட மதிப்பீடு தயாரிக்க கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் காலதாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆகவே, திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியை விரைந்து முடித்து, அதை தமிழக அரசின்தலைமைப் பொறியாளருக்கு அனுப்ப பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: