கோவை :தீபாவளியன்று அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கோவையில் 184 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுபாட்டை குறைப்பது போன்ற காரணத்திற்காக தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு நேரத்தை நிர்ணயம் செய்து அறிவிப்பு விட்டது. இந்நிலையில் அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தவர்கள் மீது தமிழகம் முழுவதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கோவை மாநகரில் நான்கு பகுதிகளாக பிரித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மேற்குப் பகுதியில் 32 வழக்குகளும், மத்திய பகுதியில் 44, கிழக்கில் 27, தெற்கில் 22 வழக்குகளும் என மொத்தம் 125 வழக்குகள் கோவை மாநகர காவல்துறையின் சார்பில் பதியப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 மற்றும் 285 என இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், கோவை புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் 14 வழக்குகளும், பேரூர் சரகத்தில் 10, கருமத்தாம்பட்டியில் 8, பொள்ளாச்சியில் 12, வால்பாறையில்15 வழக்குகள் என மொத்தம் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல்துறை சார்பில் மொத்தம் 125 வழக்குகளும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு உட்பட்டு 59 வழக்குகளும் என மொத்தம் 184 பேர் மீது அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: