வேலூர்,
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டில் பி.டெக். பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கியது. வேலூர் தலைமை தபால் நிலையத்தில் இந்த விண்ணப்பப்படிவம் விற்பனையை விஐடி வேந்தர்ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை, ஆந்திரம், போபால் ஆகிய வளாகங்களில் பல்வேறு பி.டெக். பொறியியல் பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு 2019 ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நாட்டில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும், துபாய், குவைத், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள 175 மையங்களில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்படிவங்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலூர் உள்பட நாட்டில் உள்ள 22 முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 செலுத்தியும், விஐடி பெயரில் ரூ.1200-க்கு வங்கி வரைவு காசோலை செலுத்தியும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் www.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ரூ.1,150 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க 2019 பிப்ரவரி 28-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து, மேலும் விவரங்களை www.vit.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இந்நிலையில், வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற விஐடி நுழைவுத் தேர்வு விண்ணப்ப விற்பனையை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார். இதில்,விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் ந.நாராயணன், இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கை இயக்குநர் கே.மணிவண்ணன், வேலூர் கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் என்.கோவிந்தராஜ், தலைமை அஞ்சல் அதிகாரி பி.கோமல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.