பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசுவதைவிடவும் நமோ ஆப்-பில் பேசுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் பேசுவதைவிடவும் வானொலியில் மனதின் குரலில் பேசுவதையே விரும்புகிறார். ஆனால் அதில் உண்மையை பேசுவதைவிட பொய்களை புனைந்துரைப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.

ஞாயிறன்று நமோ ஆப்-பில் அவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய் சொல்லும் இயந்திரங்கள் என்று சாடியுள்ளார். அவர்களின் பொய்களை தோலுரித்து மக்களிடம் உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்று பாஜக தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது உரையைப் படித்ததும் நமக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வரும். அதாவது ‘தான் திருடி பிறரை நம்பான்’ என்பதே அது. மகாபாரதத்தில் தர்மனும், துரியோதனனும் உலகத்தில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று தேடி வந்து சொல்லும் கதையும் நினைவுக்கு வரும்.

கடந்த தேர்தலின்போது பாஜக வெற்றிபெற்றால் கருப்புப் பணத்தை கைப்பற்றி நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பி அல்ல என அந்தக் கட்சியின் அப்போது தேசிய தலைவராக இருந்த நிதின்கட்காரி பின்னாளில் கூறியதை எந்தவகையில் சேர்ப்பது? அதாவது நாங்கள் வெற்றி பெறுவதற்காக எத்தகைய பொய்யையும் சொல்வோம் என்பதன் எடுத்துக்காட்டு அல்லவா? அந்த தேர்தலின்போதும் அதற்குப் பிறகும் நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பிறகு இதெல்லாம் தேர்தலில் சகஜமப்பா என்ற பாணியில் அமித்ஷா போன்றவர்கள் பேசியதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவையெல்லாம்தான் அந்த கட்சியினரின் உண்மை பேசுவதன் லட்சணம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்குவோம் என்று நரேந்திர மோடி நாட்டு இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப் படவேயில்லை. மோடி நமோ ஆப்-பில் பேசிய அதே நாளில் புதுதில்லியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் என்னுடைய வேலை எங்கே? என்று உரத்து முழங்கியது பாஜகவினரின் செவிகளைச் சென்று சேரவில்லையோ?

தமிழகத்தில் மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அக்கட்சியினரின் உண்மை விளம்பலின் மற்றொரு உதாரணம். தேர்தல் வந்தால் எதையாவது சொல்லி எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தயங்காமல் பொய்களை அவிழ்த்து விடுவது அக்கட்சியினருக்கும் அவர்களின் எஜ மானர்களாகிய ஆர்எஸ்எஸ்-காரர்களுக்கும் கைவந்த கலைதானே! அதனால் தானோ பொய்பற்றி மோடி அப்படிப் பேசியிருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.