தருமபுரி : இண்டூரில் கட்டப்பட்டு நான் காண்டுகளாகியும் பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூர் கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதேநேரம், இந்த வளாகம் ஆண்கள் மட்டுமே பயன்படுத்த கூடியதாகும். இந்த வளாகத்தில் தண்ணீர் வசதிகள் முறையாக செய்துதரப்படாததால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை. இதனால் அப்பகுதியினர் திறந்த வெளியிலேயே மலம் கழிக்கும் நிலை தற்போது வரை இருந்து வருகிறது. அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை கட்ட அரசு வலியுறுத்தி வரும் சூழ்நிலையில்.

இண்டூர் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் நான்கு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வளாகம் கட்டப்பட்டதே தவிர பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இதுவரை கொண்டு வரவே இல்லை. கழிப்பறை வசதி இல்லாதவர்கள் திறந்தவெளி இடங்களை தேடி செல்ல வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் நோக்கத்தை சிதைத்து கடனுக்கு கட்டடம் என அதிகாரிகளின் தங்களின் வேலை முடிந்து விட்டது என சென்றுவிட்டனர். அதன் திட்டத்தின் நோக்கம் முறையாக செயல்படுகிறதா இல்லையா என்பதை பார்ப்பதேயில்லை. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை என தெரிவித்தனர். எனவே மூடி வைத்து யாரும் பயனில்லாமல் உள்ள சுகாதார வளாகத்தில் உடனடியாக தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.