“அந்த காலத்திலேயே தீபாவளி சமயத்தில் தான் கொசுத் தொல்லை கூடி சிக்குன் குன்யா, டெங்கு போன்ற நோய்கள் பெருகும் என்று தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே தான் எண்ணெய் குளியல், வெடி வெடித்து புகை ஏற்படுத்துவது என்றெல்லாம் தீபாவளி பண்டிகையை ஏற்படுத்தினார்கள். தீபாவளி பண்டிகைக்கு பின்னால் இவ்வளவு விஞ்ஞானம் இருக்கிறது’’ என ஒரு சமூக ஊடக செய்தி பெருமிதமாக உலவிக் கொண்டிருக்கிறது.

பாரம்பரிய கைமருந்து

தொண்டை கரகரப்புக்கு இஞ்சிச் சாறு பயன் தரும். மிளகு பயன் தரும். சிலவித வைரல் ஜுரம் வந்தால் மிளகு ரசம் அல்லது மிளகு குழம்பு உபாதைக்கு நிவாரணம் தரும் என்றெல்லாம் கைமருந்து உண்டு. இவை எதுவும் நோய் நீக்கி அல்ல. ஆனால் நோயினால் ஏற்படும் உடல் உபாதைக்கு நிவாரணம் தரும். நவீன மருத்துவத்திலும் வைரல் ஜூரத்துக்கும் சளிக்கும் மருந்து ஏதுமில்லை. காலம் காலமாக கைக்கொள்ளும் கைமருந்து உடல் உபாதைக்கு எளிமையான, செலவு சிக்கனமான நிவாரணம் தான். மழைக்காலத்தில் தான் கூடுதல் சளி, வைரல் ஜுரம் வருகிறது. எனவே இஞ்சி சாறைக் குடிக்கும் எதாவது பண்டிகையை கேள்விப்பட்டு இருக்கிறார்களா? அல்லது வெள்ளிக்கிழமை ஜுரம் வந்தால் இஞ்சி சாறை குடி; வியாழக்கிழமை என்றால் குடிக்காதே என்று விதிகள் உள்ளனவா? ஏதுமில்லை. எப்போது யாருக்கு வருகிறதோ அவர்கள் மட்டுமே கைமருந்தை உண்கிறார்கள்.

கொசு உற்பத்திக்காலம்

தீபாவளி வரும் காலம் தமிழகத்தில் மழைக்காலம். தமிழகத்தில் கொசு உற்பத்தி கூடும் காலம். ஆனால் இந்தியாவின் பிற பகுதிகளில் கொசு உற்பத்தி கூடும் மழைக்காலம் ஜூன் மாதம் தான். எனவே தான் அந்த மாதம் தேசிய மலேரியா ஒழிப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. மழைக்கால கொசுவை விரட்டத் தான் தீபாவளி ஏற்பட்டது என்றால் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் தீபாவளியை ஜூன் மாதத்தில் தானே கொண்டாட வேண்டும்?தீபாவளி வரும் காலம் தான் தமிழகப் பகுதிகளில் கொசு உற்பத்தி கூடும் என்றாலும் சரியாக அதற்கும் தீபாவளி தினத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் எந்தெந்த நாட்களில் மழை பொழிந் தது; மழையின் அளவு; காற்றில் ஈரப்பதம் முதலியவை தான் என்றைக்கு கொசு உற்பத்தி கூடுகிறது என்பதை தீர்மானம் செய்கிறது. இதன் தொடர்ச்சியாக அந்த நாளைத் தொடர்ந்து டெங்கு போன்ற கொசுவால் பரவும் நோய்கள் பல்கிப் பெருகுகிறது. எனவே தீபாவளி எந்த நாள் என்பதற்கும் டெங்கு சிக்குன் குன்யா பரவுவதற்கும் தொடர்பு இல்லை.

எள்ளைப் பிய்த்து எழுபது பேருக்கு பங்கு வைப்பது…

தீபாவளி நாளுக்கும் கொசு வளர்ச்சி கூடுதலாக உள்ள நாளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே ‘ஒப்புக்கு சித்தாத்தா உறவுமுறைக்கு நெய் வார்த்தா’ என்பது போல தீபாவளி அன்று மட்டும் எண்ணெய்க் குளியல்; அன்று மட்டும் பட்டாசு வெடித்து கொசுவைக் கொன்றால் கூட கொசுவால் பரவும் நோயிலிருந்து விடுபட முடியாது. டெங்கு பரப்பும் கொசு, பகல் நேரத்தில் தான் செயல்படும். முழங்காலுக்கு கீழே உள்ள உயரத்தில் தான் பொதுவாகவே பறக்கும். எனவே மழைக்கால மாதங்களின் எல்லா நாட்களிலும், நிற்கும்போது முழங்காலுக்கு கீழே கால்களை மூடி வைத்துக்கொள்வதும் , எண்ணெய் தடவி கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வதும் சுற்றும் முற்றும் எங்கும் நீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்வதும் வீட்டில் சேமித்து வைக்கும் நீரை மூடி வைத்துக் கொள்வதும் தான் பயன்தரும்.

வேறு நாடுகளில் பட்டாசு வெடிக்கவில்லையா?

எல்லா சமூகத்திலும் விழா அல்லது மகிழ்ச்சியை கொண்டாடும் விதத்தில் பட்டாசு -வாண வேடிக்கை வெடிக்கப்படுகிறது. எனவே தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது என்பதே ‘குற்றம்’ அல்லது ‘பாவம்’ என கூறுவது தவறு தான். ஆனால் ‘‘தீபாவளி வெடிக்கு பின்புறம் விஞ்ஞானம் உள்ளது” என்று கூறுகிற அபத்த வாதங்கள் இன்றைய நிலையில் ஏற்பட வேண்டிய மாற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது. அந்த காலத்தில் மக்கள் தொகை கூடுதலாக இருக்கவில்லை; நெருக்கம் நெருக்கமாக குடியிருப்புக்கள் இருக்கவில்லை; காற்றோட்டமான வீடுகள் இருந்தன. பொருளாதாரச் சூழலில் ஒவ்வொருவரும் சிக்கனமாகத் தான் வெடி வாங்கி வெடிக்கமுடிந்தது. இன்று பட்டாசு கூடுதலாக வெடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களிலும், சில கிராமப்புறங்களிலும் மக்கள் தொகை அடர்த்தி கூடுதல். எனவே அன்று செயல்பட்டது போலவே இன்று செயல்பட முடியாது. எனவே இன்று பட்டாசு வெடிப்புக்கு கட்டுப்பாடு அவசியமாகிறது.

இன்றைய நடைமுறை நிலைமைகளை கணக்கில் கொண்டு, பல மேலை நாடுகளில் நகர்ப்புறங்களில் பட்டாசு வெடிப்பது குறித்த வரைமுறைகள் உள்ளன. தனித்தனியே பட்டாசு வெடிப்பது குறைவு. பொதுவாக நகர் முழுமைக்கும் பொது வெளியில் வாண வேடிக்கை என்று சமூக விழாவாகச் செய்கிறார்கள். ஊருக்கு வெளியே காற்றோட்டம் உள்ள பகுதியை தேர்வு செய்து இவ்வாறு வாணவேடிக்கை செய்கிறார்கள். மேலும் பட்டாசு என்பது ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வரவே. இதன் தாயகம்கூட சீனாவே. பட்டாசு வெடித்தல் மதத்தின் பாரம்பரிய சடங்கு என வாதிடல் பொருத்தமற்றது! எனவே பாதுகாப்பாய் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பட்டாசு வெடிக்கட்டும்! மகிழ்ச்சி பெருகட்டும்!

Leave a Reply

You must be logged in to post a comment.