அகர்தலா:
உளறல்கள் என்றாலே அது திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லவ் குமார் தேப்-தான் என்பது நீண்டகால நிகழ்வாகி விட்டது.

“மகாபாரத காலத்திலேயே சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தது” என்று துவங்கிய அவர், “உலக அழகி ஐஸ்வர்யா ராயா, அல்லது டயானா ஹெய்டனா?” என்ற ஆராய்ச்சி நடத்தியவர். “ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள்?” என்ற அவரின் கேள்வி உலகத்தையே “யார் இவர்?” என்று உற்றுப்பார்க்க வைத்தது.

“சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும், மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தவர்கள் அதற்கு லாயக்குப்பட மாட்டார்கள்” என்று படிக்காத மேதைபோல பேசிய அவர், “வேலையில்லாத இளைஞர்கள் வெற்றிலை பாக்குக் கடை வைக்கலாம், அல்லது மாடு மேய்க்கலாம்” என்று இளைஞர்களுக்கு இலவச வழிகாட்டுதல் வழங்கினார்.

“ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த 1913-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர், தனது நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தார்” என்று ரவீந்திரநாத் தாகூருக்கே தெரியாத வரலாற்றுத் தகவலையெல்லாம் கூறி பேராசிரியர்களை ஆச்சரியப்படுத்தினார்.
“குளத்தில் வாத்துகள் நீந்துவதால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும்” என்பதுதான், கடைசியாக அவர் உலகத்திற்கு ஆராய்ந்த அளித்த கண்டுபிடிப்பாக இருந்தது. அதன் பின்னர் சிறிதுகாலம் இடைவேளை விட்டு ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், தொழிற்சாலைகளுக்கு 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி வேண்டும்; அதுவெல்லாம் ஆகாத காரியம்; படுமாடு வளர்த்துப் பாருங்கள், 6 மாதத்தில் பணக்காரர் ஆகிவிடலாம் என்று பொதுமக்களை ஊக்கப்படுத்தியுள்ளார். தானே முன்வந்து பசுமாடுகள் வழங்கும் திட்டத்தை துவங்கப் போவதாக அறிவித்துள்ள பிப்லப் குமார் தேப், தனது நடவடிக்கையால் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அகலப் போகிறது; சுயவேலைவாய்ப்பும் பெருகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முத்தாய்ப்பாக, “முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே படுமாடுகளை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் பாலை, தானும் தனது குடும்பமும் அருந்தப் போகிறோம்” என்றும் கேட்போருக்கு உமிழை வரவழைக்கும் வகையில் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: