தருமபுரி : தருமபுரி இராமாக்கள் ஏரிக்கரையில் பழுதடைந்த நடைபயிற்சி பாதையால் நடை பயில்வோர் அவதிப்படுகின்றனர். தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையில் இராமாக்கள் ஏரிஉள்ளது. ஏரி மிகப்பெரிய பரப்பளவு கொண்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி அரசு மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இராமாக்காள் ஏரிக்கரை பொலிவுபடுத்தப்பட்டது. ஏரிக்கரையின் சரிவில் புல்தரை அமைக்கப்பட்டு, அலங்காரசெடிகள் நடப்பட்டு நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வந்தது. மேலும், ஏரியின் நடுவில் பறவைகள் வந்து தங்க இனப்பெருக்கம் செய்ய வசதியாக மண்திட்டுக்கள் அமைக்கப்பட்டு ஏரியில் படர்ந்திருக்கும் ஆகாய தாமரை மற்றும் ஏரியில் வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

இதேபோல், கரையின் மேல் பகுதியில் சென்று கரையின் சரிவில் மீண்டும் திரும்பி வரும் வகையில் வினாயகர் கோவில் முதல் ஏரிக்கோடி அருகில் உள்ள முனியப்பன் கோயில் வரைபேவர் பிளாக்குகள் பதித்து நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சுமார் 2 கிமீ பாதை அமைக்கப்பட்டது. இதில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். இதற்கென மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையை ஒட்டி நவீன கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த நடைபாதை பகுதியைச் சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டு காலமாக இந்த நடைபயிற்சி பாதைபராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. நடைபாதையில் பதிக்கப்பட்ட பேவர் பிளாக்குகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. நடைபாதையில் புல் முளைத்து புதர் மண்டிக்கிடக்கிறது. நடைபாதையையொட்டி வளர்ந்துள்ள கருவேலமரங்களின் முட்கள் நடைபாதையில் காய்ந்து விழுந்து கிடக்கிறது.

இதனால், இந்த நடைபாதையில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் படிப்படியாக தங்கள் பயிற்சியைக் கைவிடும் நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் நடைபாதையில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. கழிப்பிட வளாகம் செயல்படாமல் எந்நேரமும் பூட்டியபடியே கிடக்குகிறது. இதனால் அதிகாலை மற்றும் அந்தி சாயும் இருட்டு நேரங்களில் அங்கு சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி ஆர்வலர்கள், வயோதிகர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் என பலதரப்பட்டவர்களுக்கு பயன்பட்டுவந்ததோடு மாலை நேரங்களில் ஏரிக்கரையில் காற்று வாங்கவும், ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டு ஏரிக்கு வரும் வெளிநாட்டுப்பறவைகளைப் பார்த்து ரசிக்கும் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் இராமாக்காள் ஏரி பராமரிப்பின்றி பாழடைந்து வருவதாக தங்கள் வேதனையை தெரிவிக்கின்றனர்.ஆகவே, இராமாக்காள் ஏரியை சீரமைத்து பணியாளர்களை நியமித்து பராமரித்திட, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. -ஜி.லெனின்

Leave a Reply

You must be logged in to post a comment.