சேலம்,

பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக சேலத்தில் தொடரும் உயிரிழப்புகளின் எதிரொலியாக சேலம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குநர் டாக்டர்.தாரேஷ் அஹமது திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் நோய்கள் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பன்றிகாய்ச்சல் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் 4 சிறுவர்கள் உள்பட 8 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும், சேலம் புறநகர் பகுதிகளில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குநர் டாக்டர்.தாரேஷ் அஹமது ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் இருப்பில் உள்ளதா என மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் நோய்களினால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டம் சோமனூரை அடுத்த சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பன்(70) என்ற முதியவர் மூளைக்காய்ச்சல் காரணமாகவும், திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த போத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி(45) என்பவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். மேலும், கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (43) என்பவர் பன்றி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மதியம் அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், காய்ச்சலின் தீவிரத்தால் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திருப்பூர் கன்னிவாடி பகுதியை சேர்ந்த கவிதா (24) கடந்த 20 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேல்சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு டெங்கு இருப்பது உறுதியாகியது. ஆனால், கவிதாவும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: