திருநெல்வேலி,

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் என்கிற நூறுநாள் வேலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் சீரழிப்பதாக திட்ட அமலாக்கம் தொடர்பான அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட குழுக்கள் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அமலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நெல்லையில் நடந்தது. சங்கத்தின் நெல்லை மாவட்டத் தலைவர் டி.கணபதி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ஏ.லாசர், மாநில துணை தலைவர் மலைவிளை பாசி, குமரி மாவட்டத்தலைவர் என்.எஸ்.கண்ணன், நெல்லை மாவட்டச்செயலாளர் பாலுசாமி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ரவீந்திரன், செயலாளர் சண்முகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரூ.1000 கோடி நீர்நிலைகளை பராமரித்தல், குளங்களை ஆழப் படுத்தல், வாய்க்கால்களை தூர்வாருதல், மரம் நடுதல், புதிய மண் சாலைகள் அமைத்தல், சாலை ஓர செடிகொடிகளை அப்புறப்படுத்தல் போன்ற மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செய்யப்பட்டுவந்த பணிகள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. சட்டத்தில் குறிப்பிடாத பணிகளான உறிஞ்சுகுழி அமைப்பது, கட்டுமான பணிகள், தனியார் தோட்ட பணிகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. மற்றொரு புறம் இத்திட்டத்திற்கான தொகையிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு சட்டமன்ற விதி 110 ஐ பயன்படுத்தி எடுத்துள்ளது. இவற்றின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சீரழிக்கப்படுகிறது என ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து நவம்பர் 20ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநிலத் தலைவர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டமும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒன்றிய அளவிலான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்மணி தியாகிகளின் 50ஆம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 25ஆம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் கல்வெட்டு பதித்து அஞ்சலி செலுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.