சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டியில் சிறுமி ராஜலட்சுமி வெட்டிக்கொல்லப் பட்ட வழக்கில் முறையான விசாரணை நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஆத்தூர் அருகே தளவாய்ப் பட்டியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியை அதே ஊரைச்சேர்ந்த தினேஷ் குமார் என்பவன் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டிக் கொன்று தலையை எடுத்துச் சென்று சாலையில் போட்டான். தினேஷ்குமார் செய்த பாலியல் தொந்தரவுகளைச் சிறுமி வீட்டில் தெரிவித்ததால் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தினேஷ்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜலட்சுமி கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன்,“ ராஜலட்சுமி படுகொலை தமிழகத்துக்கே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது” என்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ராஜலட்சுமி கொலை வழக்கில் பெண் டிஎஸ்பி தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோர் சார்பில் வாதாட அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave A Reply

%d bloggers like this: