சேலம்: சேலம் அருகே 13 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி ராஜலட்சுமி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

பெண் துணை காவல் கண்காணிப்பாளரைக் கொண்டு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், நீட் எதிர்ப்பு ஆசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் சுந்தரவள்ளி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, பாவேந்தன், நாவரசு, காஜாமைதீன் உள்ளிட்ட ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.