பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் சினிமா அது. அப்படத்தில் பணியாற்றிய எனக்கு வேறுசில பொறுப்புகளோடு அப்படத்தின் உப பாத்திரங்கள் மற்றும் சிறுபாத்திரங்களுக்கான நடிகர்களை தேர்வு செய்யும் பொறுப்பும் அளிக்கப்பட்டிருந்தது. அப்படி அதற்கான ஆடிஷன் நடந்து கொண்டிருந்தபோது அதில் கலந்து கொண்ட ஒரு நடிகர், “நானும் கூத்துப்பட்டறைதான்” என்று சொன்னார். கூத்துப்பட்டறை நடிகர்கள் அனைவரையும் ஓரளவு பரிச்சயம் கொண்டிருந்த எனக்கு, அவரை கூத்துப்பட்டறையில் பார்த்ததாக நினைவில்லை. அதனால், ‘ நீங்கள் கூத்துப்பட்டறையின் எந்த நாடகத்தில் நடித்தீர்கள்?’ என்று கேட்டேன். “படித்துக்கொண்டிருக்கும்போது, தேனி, கம்பம் ஆகிய ஊர்களில் ‘கூத்துப்பட்டறை’ செய்திருக்கிறேன். பின், சென்னை வந்த பிறகு ஒரு தன்னார்வக்குழுவோடு சேர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய ஊர்களில் கூத்துப்பட்டறை செய்தேன்” என்றார்.

முதலில், அவர் சொன்னது எதுவும் எனக்கு பிடிபடவேயில்லை. பிறகு ‘அன்பேசிவம்’ படத்தில் நீங்கள் செய்த கூத்துப்பட்டறை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார், என்றார். அப்படி அவர் சொன்ன பிறகுதான் தெரிந்தது வீதியில், திறந்தவெளியில் செய்கிற வீதி நாடகங்களைத்தான் அவர் அவ்வாறு சொல்லியிருக்கிறாரென்று. அவரோடு மேலும் பேசியபோது, ‘கூத்துப்பட்டறை’ எனும் நாடகக்குழு சென்னையில் பல ஆண்டுகளாக காத்திரமாக இயங்கி வருவது தொடர்பாகவோ, அவர்கள் உருவாக்கிய நாடகம் தொடர்பாகவோ, ந.முத்துசாமி என்கிற பெயரையோ அவர் எதையுமே தெரிந்து வைத்திருக்கவில்லை என்று தெரியவந்தது. ‘கூத்துப்பட்டறை’ என்று சொன்னால் நடிகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என யாரோ அவரிடம் சொல்ல அதனால் கூட அவர் இப்படி சொல்லியிருக்கலாம். இது நடந்தது பத்துவருடங்களுக்கு முன்பு.

இதனை எதற்கு இங்கு சொல்கிறெனெனில், ‘கூத்துப்பட்டறை’ எனும் பெயர் இன்று மட்டுமல்ல அன்றும் கூட திரைத்துறையில் அறியப்பட்ட பெயராக இருந்தது. இன்றைக்கு திரைத்துறையில் நடிகராய் நுழைவோருக்கு ‘கூத்துப்பட்டறை’ என்பது ஒரு ‘கடவுச்சீட்டைப்’ போல் ஆகியிருக்கிறது. கூத்துப்பட்டறையில் நெடுங்காலமாய்ப் பணியாற்றிய கலைராணி, பசுபதி, குமரவேல், ஜார்ஜ், ஜெயகுமார், ஜெயராவ், மணிமேகலை, மீனாட்சி,தேவி, வினோதினி, சோமு, ஆனந்த்சாமி போன்றோர் திரைப்பட நடிகர்களாக பரவலாக அறியப்பட்டுள்ளனர் என்பதால் மட்டுமல்ல, கூத்துப்பட்டறையில் செயல்பட்ட விமலும், விஜய் சேதுபதியும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயக நடிகர்களாக உருவெடுத்துள்ளனர் இவையெல்லாம் இதற்கான காரணங்கள்.

இப்புதிய சூழல் ‘கூத்துப்பட்டறையை’ வேறொரு இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. உண்மையென்னவெனில் ‘கூத்துப்பட்டறை’ திரைப்படத்தில் நுழையும் நடிகர்களுக்கு பயிற்சியளிக்கும் செயல்பாடுகளில்தான் மையம் கொண்டிருந்தது. இச்செயல்பாடுகள்தாம் அதனை நீடித்து நிலைக்கவைத்தது.காமிராவின் முன் நடிப்பதற்காக நடிகர்களுக்கு பயிற்சியளிக்கிறோமென்றோ, திரைப்படத்தில் நுழைகிற வாய்ப்புகள் இப்பயிற்சியினால் கைகூடுமென்றோ எந்த உத்திரவாதமும் அவர்கள் அளிப்பதில்லை. அப்படியொரு அறிவிப்பும் அவர்கள் செய்வதில்லை. நாடகத்தில் நடிப்பதற்காகவே இப்பயிற்சிகள் நடத்தப்படுகிறதெனினும் பணம் கொடுத்து இப்பயிற்சியில் இணைகிற பலரும் இவ்வாய்ப்பினை திரைப்படத்தில் நுழைகிற ஒரு வழியாகவே கருதுகின்றனர்.

உண்மையில்,கூத்துப்பட்டறை எனும் நாடகக்குழு விரும்பி வந்து சேர்ந்திருக்கக்கூடிய இடம் இதுதானா? இந்த இடத்தை எட்டிப்பிடிப்பதற்குத்தான் நாற்பதாண்டுகாலமாக கூத்துப்பட்டறையும் ந.முத்துசாமியும் முயன்றார்களா.?
பெரிய கேள்விகள் இவை!
கடந்த பல ஆண்டுகளாக ஃபோர்டு பவுண்டேஷன் நிதி உதவியுடன் செயல்பட்டு வந்ததுதான் ‘கூத்துப்பட்டறை’. நீண்ட காலமாக ‘நிதி நல்கைகளை’ப் பெற்று செயல்பட்டு வரும் நிறுவனங்கள் அனைத்துமே கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய உருமாற்றங்களைப் பெற்றுள்ளன. நீடித்து நிலைத்துச் செயல்பட, அப்படிச்செயல்படுவதற்கு சுயமாகவே நிதி ஆதாரங்களைத்தேடிக்கொள்ள அந்நிறுவனங்கள் நிர்ப்பந்தங்களுக்குள்ளாயின. இந்நிர்ப்பந்தங்களை அவர்களுக்கு நிதி அளித்துவந்த ‘பன்னாட்டு நிதி நல்கை நிறுவனங்களே’ உருவாக்கித்தந்தன என்பது மட்டுமல்ல, ‘சுயமாக நிதியாதாரத்தினை’ பெருக்கிக் கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டறியவும் அதற்கான ஆலோசனைகளை வழங்கியும் அவற்றை உந்தித்தள்ளின.
மேலும் ‘ஃபோர்டு பவுண்டேஷன்’, ‘ராக்ஃபெல்லர் பவுண்டேஷன்’ போன்ற அமெரிக்க ‘நிதி நல்கை முகமைகள்’ இந்தியா போன்ற நாடுகளில் ‘கலைச்செயல்பாடுகளுக்கான’ நிதி நல்கைகளை பெருமளவு குறைத்துக்கொண்டன. அவற்றின் கவனம் தற்போது ஆப்பிரிக்க நாடுகளின் பால் திரும்பியுள்ளது. இம்முகமைகளால் தற்போது இந்தியாவில் ‘கலைத்துறையில்’ நேரடியாகச் செய்யப்படும் நிதி நல்கைகள், ஆய்வுத்திட்டங்கள், ஆவணப்படுத்துதல், அருங்காட்சியகங்கள் அமைத்தல் என்பதாக மட்டும் சுருங்கிவிட்டது. அதுவும் பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டு குறுகிய காலங்களுக்கே வழங்கப்படுகிறது. இத்தகைய மாறிய சூழல்கள் கூட ‘கூத்துப்பட்டறையின்’ நிலைக்கு காரணமாய் அமைந்திருக்கலாம். எனினும் இக்கேள்விகளை உரசிப் பார்த்து,பதிலளிக்கவோ, தீர்ப்புரைக்கவோ எத்தனங்களை மேற்கொள்ளுமுன் கூத்துப்பட்டறையின் நாடகச்செயல்பாடுகளையும் அதன் மையமான ந.முத்துசாமியெனும் நாடக ஆளுமையினையும் நாம் சற்று ஆழமாக அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அடுத்த வாரம்…

– நாடகவியலாளர் பிரளயன்

Leave a Reply

You must be logged in to post a comment.